என் கடைசிக் கவிதையின்
முதல் சொல்லை நானின்னும் முடிவு செய்யவில்லை.

மானே.. தேனே என்றெல்லாம் எழுத முடியாது
பசியாயிருப்பவனுக்குப்
பால்கோவாப் பொட்டணத்தை விடப்
பழையசோறும் வெங்காயத்துண்டும் ஏகாந்தம்.

என்னிலிருந்து தொடங்கிய கவிதை
என்னில்தானே நிறைவடையும்?

பாணதீர்த்த அருவியில் மூழ்கிச்செத்தவனின்
உப்பிய பூத உடல்.

காதல் தோல்வி தாங்காமல்
டெமக்ரான் குடித்து
ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில்
விரைத்துக் கிடந்த பாமாக்கா மகன்

இவற்றில் எதைக் கொண்டு
என் இறுதிக் கவிதை
தொடங்குமென்று இப்போது சொல்ல முடியுமா?
கரைகளெங்கும்
சாம்பல் கரைக்கத் தோதாய்
சுடுகாடுகளைச் சுவீகரித்துக் கொண்டு
ஈமக்கிரியைகளுக்குத் தன்னையே
ஈகை கொடுத்தபடி
கால காலமாய் ஓடிக்கொண்டிருக்கிறது
தாமிரபரணி…
இப்படித் தொடங்குகிறேன்
என் இறுதிக் கவிதையை.