நிலத்தாலாட்டு

குட்டி நிலாவை முதன் முதலாய்
பள்ளத்தில் பார்த்தது புதுப்பட்டிக்
காமாட்சிப் பாட்டி வீட்டுக் கேணியில்தான்

கோடை விடுமுறைக்கு எப்போது சென்றாலும்
படிகளில் ஏறிக் கேணிக்குள் முகம் பார்த்தபின்தான்
சாப்பாடு கீப்பாடு எல்லாமே!

ஊரணிக் கருகே இருந்ததால்
வற்றிப் போக வாய்ப்பற்று ஊறியது

தங்கை தவறவிட்ட வாளியிலிருந்து
எல்லாவற்றையும் எடுத்துத் தரும்
பாதாளக் கரண்டியை அதிசயத்தோடு
முதலில் கண்டதும் அங்கேதான்

ஐந்து வயதில் கேணிக்குள்
விழுந்த அம்மாவை
இடுப்புக் கயிறுகட்டி உள்ளிறங்கித்
தூக்கிவந்த மருதையாத்தாத்தா முதல்
எத்தனையோ மனிதர்களின்
வரலாறுகளை ஊற்றுக்குள்
ஒழித்துவைத்திருந்தது அக்கேணி

கட்டியவனின் குத்துச் சொல் தாளாமல்
அதே கேணிக்குள் செத்து மிதந்த
ஆனந்தி அக்காவின் சடலத்தைப்
பார்த்தபின்
கேணிக் குளியலும்,
நிலா ரசித்தலும்
நின்று போனது.
ஆனாலும் கவலைகள் ஏதுமற்று
நிலவுக்கு நிலத்தாலாட்டு நடத்திக் கொண்டிருக்கிறதுஅக் கேணி.                      
                                                              - முனைவர். ச. மகாதேவன் 

                                                 வாழத் தயார்

முகங்கள் இல்லையாதலால்
முகவரிகளும் இல்லை அவனுக்கு.
சிதை முகங்கள் குறித்து அவன்
சிரமப் பட்டதுபோல் தெரியவில்லை.
முகப்பூச்சு மாவுகள், சிகப்பழகுப் பசைகள்
மிச்சமென மெதுவாகச் சிரிக்கிறான்

எல்லோரிடமும் பற்களைக் காட்டிக் காட்டிப்
பேசிப் பேசிக் காலப் பச்சையத்தையே
அவன் கரைகளாக மாற்றிக் கொண்டான்.

எப்போதும் யாரையும்
குதிரையேற்றிக் குதிரையேற்றிக்
கூனிப் போயின அவன் முதுகுகள்
அவன் தண்டுவடத்தில்
தள்ளாட்டத்தின் தழும்புகள்...
யாரையும் தூக்காமல் இப்போது தனியே
அவனால் நடக்கக்கூட முடியவில்லை.

கூழைக் கும்பிடு போட்டுப் போட்டு
ஒட்டிப் போயின அவன் கரங்களிரண்டும்
பிரிக்க இயலாப் பேரிணைகளாயின.

மூளையை முன்னரே எடுத்தாகி விட்டதால்
அது பற்றிச் சிந்திக்கத் தேவையற்றதாகிவிட்டது

இப்போது
அவன் - இந்த
உலகில் வாழத் தயாராகி விட்டான்.

                                                            தனி யொருவனுக்கு உணவிலை பாரதி!

பழுக்கக் காய்ச்சிய அரிவாளைச்
சுத்தியலால் அடித்துத் தண்ணீரில் முக்கும்போது
ஒரு சத்தம் வருமே.

அடிவயிற்றில் அதே சத்தத்தோடு
பசியைப் பற்றியபடி
குப்பைத் தொட்டியருகே
அவன் குந்தியிருக்கிறான்...
தெருநாயின் பார்வையிலும் போட்டியாளனாய்

மகாராஜநகர் திருமண மண்டபத்திற்கு
இடப்பக்கமுள்ள தண்டவாளக்
குப்பைத் தொட்டிக்கு
அவன் பிள்ளைகளும்
பிச்சைக்குப் போயிருக்கின்றன

வெகுநேரமாய் காத்துக்கிடந்தும்
ஓர் இலைகூட
வெளியே வீசப்படவில்லை
இனி எச்சில் இலையும்
வெளியே வராதாம்.
அதையும் ஒருவன்
கான்ட்ராக்ட் எடுத்துள்ளானாம்.

இப்போது
பசியின் பந்தியில்
பாவம்
அவனும் அவன் பிள்ளைகளும்

                         வாய் ஏதுமற்று

கதவில் மாட்டி
அறுந்து துடிக்கிறது பல்லியின் வால்.
பிடித்து மடி கரந்த
இரும்புக் கரத்தின் வலிமை தாங்கமுடியாமல்
வலியோடு நடக்கிறது சினைவெள்ளாடு

இரு சக்கர வாகனத்தில் சிக்கி
கால் முறிந்து முனகலுடன்
கெந்திக் கெந்தி நடக்கிறது நாய்

முப்பது மூட்டைகளோடு
முன்னேற முடியாமல்
திருவள்ளுவர் மேம்பாலத்தில்
திரவம் வடித்து நுரைதள்ளி நிற்கிறது
வண்டிக்காளை.

அங்குச அழுத்தம் தாங்காமல்
வேகாத வெயிலில்
வெந்து நொந்தபடி
ஆசிதருகிறது அந்த யானை

மூக்குப் பொடியின் நொடிதாங்கும் திரணற்றுச்
சாக்கடைக்குள் விழுகிறது
சபிக்கப்பட்ட ஓணான்

ஆனாலும்...
வலிகளோடு வாழத்தான் செய்கின்றன
அஃறிணைகளும் கூட...
புலம்பக் கூட வாயேதுமற்று.