தப்பாய் போன அப்பாப் பழமொழி

                                    குழந்தை பிறந்தவுடன்
அந்நாளின் காலண்டர்தாளைக் கிழித்து
நாற்பது பக்க நோட்டில் ஒட்டி
இன்னார் குழந்தை இந்த நாளில்
சுப ஜனனம் என்று மறக்காமல்
எழுதி ஆவணப்படுத்துவார் அப்பா.

கேஸ் சிலிண்டர் வந்தவுடன்
சோற்றுப் பருக்கையை நசுக்கிக்
காலண்டர் தாளால் காலப்பதிவு செய்வதும் அவர்தான்.

கழிவு நீர்த் தொட்டியைச்
சுத்தம் செய்த நாளைக் கூடத்
தாரால் தகரக் கதவில் அவர் எழுதியிருந்தார்.

வங்கி நாமினிக்காக
என் மனைவியின் பிறந்தநாளை
ஐ.ஓ.பி. மேலாளர் கேட்டார்;
அதையே நானும் அவளிடம்
தொலைபேசியில் கேட்டேன்
அதோடு கெட்டேன்.

அப்பாவுக்குப் பிள்ளை
தப்பாமல் பிறந்தானென்ற
பழமொழியும் இப்போது
தப்பாய் போனதெப்ப

                      - முனைவர். ச. மகாதேவன்

                            பயண மரணம்


பரபரப்பான சாலைகளில் தொடங்குகின்றன
நம் ஓட்டமிகு ஓயாத “காலைகள்“;

மின்சாரத் தொடர் வண்டித் தொங்கல்களில்

முடிகின்றன… நம் மயக்கந்தரு “மாலைகள்”.

பாற்கடலுமற்றுப் பஞ்சணையுமற்றுச்

சன்னல்களில் சாய்ந்தபடி

கணநேரச் சயனங்களுமுண்டு சில நாட்களில்

பூங்கா நகர்த் தூங்கா நிலையத்தில்

நடைபாதை சிமிண்ட் தளத்திற்குத்

தண்டவாளத்திலிருந்து தாவி ஏற முயல்கிறது
நகரத்தின் விரைவறியா – அச்

சின்னஞ்சிறு அணில் குஞ்சு.

யாரும் எதிர்பாராக் கணத்தில்

அதைக் கொத்தித் தூக்கத் துடித்த

காகங்களைத் தண்டவாளத்திலிறங்கி

விரட்டி விடுகிறார் அக்கிராமத்து மனிதர்

வலப்புறமிருந்து விரைந்து வந்த

தொடர்வண்டி ஏறிச் சின்னாபின்னமாகிறது

அச்சின்ன அணில்.

பேயறைந்து அவர் நிற்க

காகிதக் குவளைகளோடும்
கோக் பாட்டில்களோடும்

வாக்மென் பாதசாரிகளுடனும்
வருத்தமற்றிருந்தது

எப்போதும் போல் இயல்பாயிருந்தது அந்நிலையம்

பத்து நிமிடங்களுக்கு முன் தண்டவாளம்

கடந்தவன் ரத்தச்சகதியாக மாறியதையும் அமைதியாகப்

பார்த்ததைப் போல...

                                 - முனைவர். ச. மகாதேவன்

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினவிழிப்புணர்வுக் கவிதை
 





                  அதுவரை ஓய்வில்லை.......                                                     
                                                              
                                                                       யாரப்பா அது!
உலகப்பந்தை உயிரோடு புதைப்பது?

தவலைப் பானையில் வெந்நீர் போட்டது மாதிரி

கவலைப் பானையில் கண்ணீரை நிரப்பியது யார்?

துருவப் பகுதிகளில் பனிப்பாறைகள் உருகினால்
         தூத்துக்குடிக் கடல், பாளை வரை பரவுமப்பா!

பதை பதைக்கவில்லையா நெஞ்சம்?

அன்று ஓசிக்காற்றை ஒய்யாரமாகச் சுவாசித்தவன்

இன்று ஏசிக்காற்றுக்கு ஏங்குவது ஏனப்பா?

வெப்பத்தை உருட்டிக் கக்கத்தில் வைத்துக் கொண்டது போல்

துக்கத்தில் துடிக்கிறதப்பா தூய பூமி!

வெட்கத்தை விட்டுச்சொல்...

உனக்கும் இதில் பங்கில்லையா?

எருமைக்குரல் ஒலியெழுப்பிகளை மாட்டியபடி - சாலைகளில்

இருசக்கர ஊர்திகளில் நீ பறக்கும் போது

மருத்துவமனைகளின் மண்டையோட்டை நீ உடைக்கவில்லையா?

கொசு மருந்து வண்டிகளைப் போல

கரும்புகைக் கக்கிப்போகும் உன் வாகனங்களால்

பயணச்சாலைகள் சுடுகாடுகளாய் மாறிவிடவில்லையா?

ஓசோன் குடைகளில் ஓடிப்போய் ஓட்டை போட்டவனே!

உன் தோலெல்லாம் தொழுநோய் வரச்சம்மதமா?

வயல்களை உழுது உரத்தால் நிரப்பினாய்!

காய்கனிகளை எல்லாம் வேதியியல் கிடங்காய் மாற்றினாய்!

கழிவுத் தொட்டியாய் தாமிரபரணியை மாற்றினாய்!

பிளாஸ்டிக் அழிவுகளால் உலகத்தைத்தாக்கினாய்!

குருதி முதல் சாம்பார் வரை பாலிதீன் பைகளில் தேக்கினாய்!

இயற்கையே சுகமென்றிருந்தவனின் இதயத்தைத் தாக்கினாய்!

நுரையீரலோடு தப்பாமல் தண்ணீர்ப் பாட்டிலையும் தூக்கித் திரிபவனே! –

இனி

உயிர்க்காற்றுக்கு உரிய உத்திரவாதம் இல்லாததால்

வாயு உருளைகளை வயிற்றில் கட்டிக்கொண்டு திரியப் போகிறாயா?

மரங்களின் மரணத்திற்கு மனுப்போட்டு விட்டுத்தானே

நான்கு வழிச் சாலைகள் அமைக்க நாள் செய்தாய்!

விழிப்புணர்வுக் கவிதை

அதுவரை ஓய்வில்லை…

  திருச்செந்தூர்ச் சாலையில் வானுயர்ந்து இருந்த

மருதமரங்களின் இடத்தில் இப்போது சிக்னல்

மரங்கள் சிக்கலாய் சிரிக்கின்றனவே!

உன் மின்சார ரம்பங்கள் படாமல்

மிச்சசமிருப்பது கோயில் கொடி மரங்கள் மட்டும்தானா?

  குளங்களைக் குறிவைத்தாய் – பாவம்

அவற்றில் பேருந்துகள் நிற்கின்றன.

நதிகளைக் குறி வைத்தாய்

அவற்றைப் பொக்லைன்கள் தின்கின்றன.

  இயந்திரங்களோடு நீ எங்கே சென்றாலும்

இடரென்னவோ இயற்கைக்குத்தான் எப்போதும்!

ஜீன் – 5

v இது கொண்டாடப்பட வேண்டிய தினமன்று

கழிவுகளின் அழிவுகளைக் கண்டு நாம்

மாற வேண்டிய தினம்

v இனி ஒரு விதி செய்வோம்...

தனி ஒரு வழி செய்வோம்...

இற்றுப் போகும் சுற்றுச்சூழலைப்

பற்றிப் பாதுகாப்போம்

அதுவரை ஓய்வில்லை.

             - முனைவர். ச. மகாதேவன்