ரசி . . .  யாவற்றையும்
ஈரமாயிருக்கிர வரை
ஒட்டத்தான் செய்கிறது
மணலும் மனமும்.

பயமற்று பயணிக்கும் வரை
பாதங்களை வருடத்தான் செய்கிறது
அலையும் மலையும்.

இறங்கத் தயாராகிச்
சிறகுகள் விரிக்கும் வரை
மேல் பரப்பில் லேசாகவே பறக்கிறது
விமானமும் தன் மானமும்

ரசிக்கும் உள்ளம் இருக்கிறவரை
அழகாகவே சிரிக்கிறது
படித்த பள்ளியும்
சப்பாத்திக் கள்ளியும்.

இருக்கிற வரைக்கும்
வெறுப்பை மறுக்கும்
இனிய ரசனை யிருந்தால்
எதுவும் சிறக்கும்
மனம் மகிழ்ச்சியில் பறக்கும்.

                 - முனைவர். ச. மகாதேவன்

                 ஒன்றுமற்ற வாழ்வு
 
கார்பைடு கல்லுக்குள் கனியாகும்                     தேமாங்காய்கள்.
கத்தி எடுத்தால் மட்டுமே திறக்கும்
கர்ப்பப்பைகள்.
எந்திரங்கள் இழுத்து நிலையம் சேரும்
ஆனித்தேர்கள்.
கல்யாண வீடுகளில் மாடு தின்றுவிடாமலிருக்க
உரச்சாக்கு சுற்றப்பட்ட வாழைமரங்கள்.
ஊரெங்கும் பெருகி விடாமலிருக்கக்
கருத்தடை செய்யப்பட்ட நாய்கள்
தொட்டிகளில் வளரும்
போன்சாய் ஆலமரங்கள்
 
இத்தனையும் பார்த்து
பனிக்கட்டி ஏந்திய
பள்ளிச் சிறுவனின்
உள்ளங்கை போல்
ஒன்றுமற்று வாழ்கிறேன்.
             - முனைவர். ச. மகாதேவன்


                        செம்புலச் செய்தி

செம்புலமெல்லாம்
செங்கற் சூளையாயிற்று

பெயல் நீரையெல்லாம்
புட்டியிலடைத்து
விற்றாயிற்று
இதில் இனி…
அன்புடை நெஞ்சமாவது
உறவு கலப்பதாவது!
ஒழுங்கு மரியாதையாக
ஜதாகக்காரன்
பேச்சைக் கேட்டு
அப்பா பார்த்த பெண்ணைக்
கட்டியழு காலம் முழுக்க
                    - முனைவர். ச. மகாதேவன்