யாம நிலா

யாம நிலா
ஈராயிரமாண்டுப் பழமையான
கோவிலை மேலும் செறிவாக்க
அங்குமிங்கும் பறக்கிற வவ்வால்களைப் போலப்
பயணச் சிற்றுண்டிகள்
நம் பயணங்களைச் செறிவாக்குகின்றன.

திருநெல்வேலி அல்வாக்களும்
சாத்தூர் வெள்ளரிப் பிஞ்சுகளும்
கோவில்பட்டி கடலைமிட்டாய்களும்
கடம்பூர் போளிகளும்
திண்டுக்கல் கொடை ஆரஞ்சுகளும்
மணப்பாறை முறுக்குகளும்
நம் இரயில் பயணங்களை
இரசித்தலுக்குள்ளாக்கின.

அன்பின் கண்களில் பார்க்கும்போது
யாமம் கூடப் பேரழகுதான்.
யாம நிலாவும் ஓரழகுதான்.

ரசித்தலும் வயிறுநிறையப் புசித்தலும்
கவலையற்று வசித்தலும்தானே வாழ்க்கை!


நகரும் அதிசயம்

ஆனித்தேர் பார்க்க வேண்டுமென்றால்
தட்டாக்குடித்தெரு சரசுப்பெரியம்மையோடுதான்
போக வேண்டும்…
கைகளைப் பிடித்தபடி
அவளிடம் கதை கேட்ட தேர் நாட்கள் தேனானவை.

முழுத்தேரைச் செய்யத்
தச்சர்கள் முயன்றபோது
ஆகாயத்தில் பறந்ததால் இப்போதுள்ள
தேரெல்லாம் முக்காலரைக்கால் அளவு தண்டாதென்பாள்

புதுத்தேர் செய்தபின்
தத்தம் உளியால் சுண்டுவிரலை அறுத்துக்
குருதிவடித்துத் தச்சர்கள் தச்சுக்கழிப்பரென்பாள்.

சுதந்திரம் பெற்ற ஆண்டின் ஆனித்தேர் விழாவில்
நெல்லையப்பர் தேர் உச்சியில்
தேசியக்கொடி பறந்ததென்பாள்

எழுபத்தேழில் தேர்கிளம்பும் முன்
கிடாவெட்டித் தேரடிமாடனுக்குப் பலி தராததால்

லாலா சத்திர முக்கில் தடிபோட்ட
நாலுபேரைத் தேர் நசுக்கிக்கொன்றதென்பாள்.

குழந்தை பிறந்தவுடன்
தேரடி மாடனுக்குப் பொங்கல் வைக்க வில்லையென்றால்
அர்த்தஜாமத்தில் அலறி அழுமென்பாள்.

எந்தக் கடை முன் தேர்நிற்கிறதோ
அவர்கள் பொங்கல் வைத்தபின்தான்
அடுத்தஅடி நகருமென்பாள்
மறுநாள் தேர்வடம் பார்க்கக்
கங்காளநாதர் வருவாரென்பாள்

உள்ளிருந்த உற்சவரைப் பற்றி
அவள் சொன்னதை விடத்
தேர் பற்றிச் சொன்னவை அதிகம்.
அந்த ஆனித்தேரைப் போல
சரசுப் பெரியம்மையும் நகரும் அதிசயம்
உயிருள்ள உலவும் தொன்மம்.





நகரப் பேருந்தில் நெல்லையப்பர் கோவிலுக்குப்
பயணிக்கும்போது பார்த்த
சாலையோரத்துத் தெரஸா ஓவியம்!
முகச் சுருக்கங்களோடு கருணை பொங்கிய
அன்னையின் ரங்கோலி உருவத்தின் மேல்
காசுகள் ஏற்படுத்திய காயங்கள்..
பார்க்கப் பரிதாபமானது.

பின்னணியை விட்டுயர்ந்து
முப்பரிமாண பிம்பமாய்
பேசுகிறது அச்சாலையோரத்து ஓவியம்

தூரிகைளால் வரையப் படாத
அவ்வுயிர் ஓவியத்தைச் சுற்றிக்
கூட்டம் கூட்டமாய் அப்பாவி ஜனங்கள்

கடந்த வாரம் லூர்துநாதன் சிலைக்கருகே
சிலுவையில் ஏசுநாதர் ரத்தம் சிந்திய
ஓவியத்தை உள்ளுக்குள் ரத்தம் சிந்த அவன்
வரைந்து முடித்து விட்டுக்
கல்மீது குத்தவைத்துக் காத்திருந்தான்.

வீசியெறியப்பட்ட காசுகள் ஏற்படுத்திய
காயங்கள் வலிமையாயிருந்த காரணத்தால்
அவன்
அதன்பிறகு எந்த ஓவியத்தையும்
வரையவே இல்லை.

இப்போது
சுலோசன முதலியார் பாலநடைபாதையில்
சுருண்டு கிடக்கிறான்
முடிந்தால் யாராகிலும்
அக் காட்சியை வரையலாம்.
அதையும் காசுகள் காயப்படுத்தலாம்.



மண்பெட்டி அடுப்புகளில்
சமையல் செய்வாள் சாரிப்பாட்டி

அடுப்பில் கம்பிக்கோலம் போட்டுப்
பக்கவாட்டிலெல்லாம் சாணியால் மொழுகி
அருள் அன்கோ விறகுச் சுள்ளிகளை
உள்ளே வைத்து ராம நாமத்தோடு
மண்ணெண்ணெய் ஊற்றி… அவள்
அடுப்பைக் கபகபவென எரியச்செய்வதே
அலாதியான காட்சி.
அன்னபூரணயின் பெயரைச் சொல்லி
அரிசியைக் களைந்து
கொதிக்கும் உலையிலிடுவாள்

விறகின் பின்புறம் தைலம் போல்
சிகப்பு நிறத் திரவம் கசிந்து
அடுப்பு சத்தமிட்டு எரியும்போது
பாட்டி சொல்வாள்…
விருந்தினர் யாரோ வரப்போகிறார்களென.

அடுப்பின் மொழியறிந்தவள் அவள்
வருவோர் உண்ணப்
பிடியரிசியை உலையில் போடுவாள் அதிகமாக

இன்று
சத்தமிடும் அடுப்புமில்லை
வருவோருக்கெல்லாம் அள்ளியள்ளி
அன்னமிடும் அவளுமில்லை
அமைதியாகிவிட்டன
அடுப்பும் அடுக்களையும்.




என் கடைசிக் கவிதையின்
முதல் சொல்லை நானின்னும் முடிவு செய்யவில்லை.

மானே.. தேனே என்றெல்லாம் எழுத முடியாது
பசியாயிருப்பவனுக்குப்
பால்கோவாப் பொட்டணத்தை விடப்
பழையசோறும் வெங்காயத்துண்டும் ஏகாந்தம்.

என்னிலிருந்து தொடங்கிய கவிதை
என்னில்தானே நிறைவடையும்?

பாணதீர்த்த அருவியில் மூழ்கிச்செத்தவனின்
உப்பிய பூத உடல்.

காதல் தோல்வி தாங்காமல்
டெமக்ரான் குடித்து
ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில்
விரைத்துக் கிடந்த பாமாக்கா மகன்

இவற்றில் எதைக் கொண்டு
என் இறுதிக் கவிதை
தொடங்குமென்று இப்போது சொல்ல முடியுமா?
கரைகளெங்கும்
சாம்பல் கரைக்கத் தோதாய்
சுடுகாடுகளைச் சுவீகரித்துக் கொண்டு
ஈமக்கிரியைகளுக்குத் தன்னையே
ஈகை கொடுத்தபடி
கால காலமாய் ஓடிக்கொண்டிருக்கிறது
தாமிரபரணி…
இப்படித் தொடங்குகிறேன்
என் இறுதிக் கவிதையை.




எச்சில் இலைகளை உண்ண
எதிர்பார்ப்புடன்
காத்திருந்த காளைகளுக்கு
அதே வடிவில்
வெளியே வீசியெறியப்பட்ட
பச்சைக் காகித இலைகளால்
ஏமாற்றம்.
பாவம்.. அன்று முதல்
காகிதம் தின்னும்
கழுதைகளாயின
அக்காளைகள்
உரச்சாக்கு சுற்றப்பட்ட
குலைவாழைகள்
விழா முடிந்தபின் குப்பைத் தொட்டியில்..
உரச்சாக்கை உரிக்கத் தெரியாமல்
சுற்றி வருகின்றன அக்காளைகள்.

அப்போது
கழுதையானகாளை
இப்போது
என்னவாக மாறப்போகிறதோ
தெரியவில்லை…



கார்பைடு கல்லுக்குள் கனியாகும்
தேமாங்காய்கள்.
கத்தி எடுத்தால் மட்டுமே திறக்கும்
கர்ப்பப்பைகள்.
எந்திரங்கள் இழுத்து நிலையம் சேரும்
ஆனித்தேர்கள்.
கல்யாண வீடுகளில் மாடு தின்றுவிடாமலிருக்க
உரச்சாக்கு சுற்றப்பட்ட வாழைமரங்கள்.
ஊரெங்கும் பெருகி விடாமலிருக்கக்
கருத்தடை செய்யப்பட்ட நாய்கள்
தொட்டிகளில் வளரும்
போன்சாய் ஆலமரங்கள்

இத்தனையும் பார்த்து
பனிக்கட்டி ஏந்திய
பள்ளிச் சிறுவனின்
உள்ளங்கை போல்
ஒன்றுமற்று வாழ்கிறேன்.





செம்புலமெல்லாம்
செங்கற் சூளையாயிற்று

பெயல் நீரையெல்லாம்
புட்டியிலடைத்து
விற்றாயிற்று

இதில் இனி…
அன்புடை நெஞ்சமாவது
உறவு கலப்பதாவது!
ஒழுங்கு மரியாதையாக
ஜதாகக்காரன்
பேச்சைக் கேட்டு
அப்பா பார்த்த பெண்ணைக்
கட்டியழு காலம் முழுக்க




ஆதியின் சாயலில்
யாவரும் பிறக்கிறோம்
ஆதியின் சுவாசத்தில்
யாவரும் பிழைக்கிறோம்
ஆதியின் வியாதியால்
யாவரும் மடிகிறோம்
ஆதியின் மொழியில்
யாவரும் பறைகிறோம்.

ஆதியால் ஜனித்து
ஆதியால் வாழ்ந்து
ஆதியால் வீழ்ந்து
இறந்தகால ஆதியின்
நிகழ்காலப் பாதியாய்
வாழும் நாம்
ஆதியின் எச்சங்கள் என்பதே
சாலப் பொருத்தம்.




உலகெங்கும் புரட்சிகள் நடந்தாலும்
உன் கவனம்
உரசல் பாடல்களின் உட்பொருள்
உளறல் குறித்துத்தான்.

தீவுகளெங்கும் தீப்பற்றி எரிந்தாலும்
உன் கவனம்
ஐ.பி.எல். போட்டிகளின்
ஓட்ட உயர்வு குறித்துத்தான்.

அவனியெங்கும் அணுக்கதிர்வீச்சில்
அழிந்தாலும்
உன் கவனம்
இணையத்தில் இறக்கம் செய்யப்பட்ட இரகசியக்
காட்சிகள் குறித்துத்தான்.

நாடெங்கும் ஊழல் மலிந்தாலும்
நாளை ஊதியம் உயருமா? என்பதைக்
குறித்துத்தான்.

உலகின் உலக்கை – நம்
வலக்கை உடைத்து
தலையைத் தாக்காத வரை
உன் மெத்தனம் குறித்து
நீ ஒரு தினம் கூட
வருந்தப் போவதில்லை.




என் தெய்வம் மண்ணாலும் மாடத்தாலும்
சுட்ட சுண்ணாம்பாலுமானது.
என் தெய்வத்திற்கு என்னைப் போல்
வானம் ஒன்றே மேற்பரப்பு.

என் தெய்வம் நித்ய பூஜை செய்யச் சொல்லாது;
என் தெய்வம் நானருந்தும்
யாவற்றையும் அருந்தும்.
எதையும் கூடாதெனப் புறந்தள்ளாது;
என் தெய்வம் கோவில் கட்டிக்
கும்பிஷேகம் நடத்தச் சொல்லிப்
பிரசன்னத்தில் பேசாது.

என் தெய்வத்தை எவரும் தொடலாம்
எப்போதும் பூ விடலாம்.

என் தெய்வம் பாசாங்கற்றது
பட விளம்பரங்கள், இணைய முகவரிகள் அற்றது.

என் தெய்வம்
ஆளுயர உண்டியல்கள், அறங்காவல்
குழுக்கள், நன்கொடைச் சீட்டுகளற்றது

என் தெய்வம்
மறந்த நேர்ச்சைகளுக்காக
மரண அடி கொடுக்காது
மொத்தத்தில்
என் தெய்வம்
என் இயல்பானது
என் சாயலுடையது
என் குணம், என் நிறம்,
என் மணம், என் மண் மணமுடையது.
உள்ளம் பெருங்கோயில்
உள்ளிருப்பது என் தெய்வம்.
எனவே உற்சவங்கள் தேவையில்லை
உள் நினைத்தல் ஒன்றே போதும்.




கூவங்களைத் தனதாக்கி
அழுதலை அலையாக்கிச்
செத்தமீன்களோடும்
புலவு நாற்றமெடுத்த நெய்தல் பரப்போடும்
கரையிடம் கண்ணீர்க் கடிதம் தர
முயல்கிறது அலைகடல்

மதுபானப்புட்டிகளின் மலைப்பில்
வெள்ளைக் கண்ணீர்த்தாரைகளைக்
கொட்டியபடி
குற்றால அருவிகளும் அகத்தியர் அருவிகளும்

சாயப் பட்டறைகளின்
மாய நிறங்களைத் தனதாக்கி
நாளொரு வர்ணமாகப்
பொழுதொரு நச்சாக
ஓடிக்கொண்டேயிருக்கின்றன
தமிழகத்து வண்ண நதிகள்.

அணுக்கதிர் வீச்சுக்கு
ஆளாகி அழிகின்றன
உலக நாடுகள்.
இழந்த நிமிடங்களின்
இறந்தகாலப் புதல்வர்களாக
இரங்கல் கவிதை
இயற்றிக் கொண்டிருப்பதைத் தவிர
இப்போது நம்மால்
என்ன செய்ய முடியும்?





ஈரமாயிருக்கிர வரை
ஒட்டத்தான் செய்கிறது
பாதங்களை வருடத்தான் செய்கிறது
அலையும் மலையும்.

இறங்கத் தயாராகிச்
சிறகுகள் விரிக்கும் வரை
மேல் பரப்பில் லேசாகவே பறக்கிறது
விமானமும் தன் மானமும்

ரசிக்கும் உள்ளம் இருக்கிறவரை
அழகாகவே சிரிக்கிறது
படித்த பள்ளியும்
சப்பாத்திக் கள்ளியும்.

இருக்கிற வரைக்கும்
வெறுப்பை மறுக்கும்
இனிய ரசனை யிருந்தால்
எதுவும் சிறக்கும்
மனம் மகிழ்ச்சியில் பறக்கும்.




வந்த தேதியை அறிவிக்கச்
சிலிண்டரில் ஒட்டப்பட்டுள்ள
காலண்டர்தாள் மாதிரி
கண்ணுக்குத் தெரியாத
காலக் காலண்டர்கள்
ஒட்டப்பட்டுள்ளதா
நம் முகத்தில்?



வளையோர் சூடார்
இளையோடும் தேடார்
என்றாலும் எருக்க
இலைகளுக்கிடையே
எழுச்சியோடு காத்திருக்கிறது
வெள்ளெருக்கம் பூ....


குழுப்புகைப்படம்
ஒவ்வோர் ஆண்டும்
மூன்றாமாண்டு முடித்துச் செல்கிற
மாணவ மாணவிகளுடன்
எடுத்துக்கொள்கிறபோது
யாரேனும் ஒருவர்
கண்ணை மூடத்தான் செய்கிறார்கள்

புகைப்படக் கருவியின்
ஒளி உமிழ் விளக்கு
கணநேரத்தில்
வெள்ளை ஒளிக் கற்றையை
வேகமாக வீசும்போது
யாரேனும் ஒருவர்
கண்மூடத்தான் செய்கிறார்கள்.

முந்தைய வினாடிகளை விடப்
பயன்பெறும் வினாடிகளில்
பல மடங்கு
கவனமாயிருக்கத்தான்
வேண்டியுள்ளது

கண நேரத்தில்
கண் மூடியவர்கள்
காலம் முழுக்கக்
கண்மூடியவர்களாய்
சட்டமிட்டு
பலரது வீட்டுச் சுவர்களில்
ஆணியில் படமாகத்
தொங்கவிடப்படுகிறார்கள்...
ஆகவே
கவனமாயிருங்கள்..
குழுப்புகைப்படம்
எடுக்கும்போது
எப்படிச் செயற்கைச் சிரிப்பைச்
சிந்தி விட்டுக் காத்திருக்கிறீர்களோ
அதே போல்...
கண்ணிமைகளிலும் 

--



முரண்

பென்சில்
செய்வதே
பெரிய மரத்தை
அறுத்துத் தானே!




புறவழிச் சாலையோரங்களில்
புலம் பெயருங்கள்
இடை நில்லாப் பேருந்துகளில் – இனி
கிராமத்தாருக்கு இடமில்லை
நகரத்தை விட்டு நாலுமைல்
தொலைவில் உள்ளீர்களாம்
விரைவஞ்சல் நிறுவனங்கள்
கடிதப் பதிவுகளை ஏற்க மறுக்கின்றன.
பள்ளிக் கூடத்திற்குப் பாவம்
பிள்ளைகள்
பத்துக் கிலோமீட்டர் அலைகிறார்கள்
சாராயக் கடைகள் மட்டும்
சந்துக்கு இரண்டுண்டு
இனி
உங்கள் கிராமத்தை
நகரத்திற்கருகே
நகர்த்துவதைத் தவிர
வேறு வழியில்லை...

Blog Archive