ஆதியின் பாதிகள்

ஆதியின் சாயலில்
யாவரும் பிறக்கிறோம்
ஆதியின் சுவாசத்தில்
யாவரும் பிழைக்கிறோம்
ஆதியின் வியாதியால்
யாவரும் மடிகிறோம்
ஆதியின் மொழியில்
யாவரும் பறைகிறோம்.
ஆதியால் ஜனித்து
ஆதியால் வாழ்ந்து
ஆதியால் வீழ்ந்து
இறந்தகால ஆதியின்
நிகழ்காலப் பாதியாய்
வாழும் நாம்
ஆதியின் எச்சங்கள் என்பதே
சாலப் பொருத்தம்.

  - முனைவர். ச. மகாதேவன்

                                                  உரலையாவது புரட்டு

உலகெங்கும் புரட்சிகள் நடந்தாலும்
உன் கவனம்
உரசல் பாடல்களின் உட்பொருள்
உளறல் குறித்துத்தான்.

தீவுகளெங்கும் தீப்பற்றி எரிந்தாலும்
உன் கவனம்
ஐ.பி.எல். போட்டிகளின்
ஓட்ட உயர்வு குறித்துத்தான்.

அவனியெங்கும் அணுக்கதிர்வீச்சில்
அழிந்தாலும்
உன் கவனம்
இணையத்தில் இறக்கம் செய்யப்பட்ட இரகசியக்
காட்சிகள் குறித்துத்தான்.

நாடெங்கும் ஊழல் மலிந்தாலும்
நாளை ஊதியம் உயருமா? என்பதைக்
குறித்துத்தான்.

உலகின் உலக்கை – நம்
வலக்கை உடைத்து
தலையைத் தாக்காத வரை
உன் மெத்தனம் குறித்து
நீ ஒரு தினம் கூட
வருந்தப் போவதில்லை.
  - முனைவர். ச. மகாதேவன்

                 இரங்கலும் இரங்கல் நிமித்தமும்…

கூவங்களைத் தனதாக்கி
அழுதலை அலையாக்கிச்
செத்தமீன்களோடும்
புலவு நாற்றமெடுத்த நெய்தல் பரப்போடும்
கரையிடம் கண்ணீர்க் கடிதம் தர
முயல்கிறது அலைகடல்

மதுபானப்புட்டிகளின் மலைப்பில்
வெள்ளைக் கண்ணீர்த்தாரைகளைக்
கொட்டியபடி
குற்றால அருவிகளும் அகத்தியர் அருவிகளும்

சாயப் பட்டறைகளின்
மாய நிறங்களைத் தனதாக்கி
நாளொரு வர்ணமாகப்
பொழுதொரு நச்சாக
ஓடிக்கொண்டேயிருக்கின்றன
தமிழகத்து வண்ண நதிகள்.

அணுக்கதிர் வீச்சுக்கு
ஆளாகி அழிகின்றன
உலக நாடுகள்.
இழந்த நிமிடங்களின்
இறந்தகாலப் புதல்வர்களாக
இரங்கல் கவிதை
இயற்றிக் கொண்டிருப்பதைத் தவிர
இப்போது நம்மால்
என்ன செய்ய முடியும்?


                                     தெய்வம் தொழல்…

என் தெய்வம் மண்ணாலும் மாடத்தாலும்
சுட்ட சுண்ணாம்பாலுமானது.
என் தெய்வத்திற்கு என்னைப் போல்
வானம் ஒன்றே மேற்பரப்பு.

என் தெய்வம் நித்ய பூஜை செய்யச் சொல்லாது;
என் தெய்வம் நானருந்தும்
யாவற்றையும் அருந்தும்.
எதையும் கூடாதெனப் புறந்தள்ளாது;
என் தெய்வம் கோவில் கட்டிக்
கும்பிஷேகம் நடத்தச் சொல்லிப்
பிரசன்னத்தில் பேசாது.

என் தெய்வத்தை எவரும் தொடலாம்
எப்போதும் பூ விடலாம்.

என் தெய்வம் பாசாங்கற்றது
பட விளம்பரங்கள், இணைய முகவரிகள் அற்றது.

என் தெய்வம்
ஆளுயர உண்டியல்கள், அறங்காவல்
குழுக்கள், நன்கொடைச் சீட்டுகளற்றது

என் தெய்வம்
மறந்த நேர்ச்சைகளுக்காக
மரண அடி கொடுக்காது
மொத்தத்தில்
என் தெய்வம்
என் இயல்பானது
என் சாயலுடையது
என் குணம், என் நிறம்,
என் மணம், என் மண் மணமுடையது.
உள்ளம் பெருங்கோயில்
உள்ளிருப்பது என் தெய்வம்.
எனவே உற்சவங்கள் தேவையில்லை
உள் நினைத்தல் ஒன்றே போதும்.
                      - முனைவர். ச. மகாதேவன்

                                காற்றின் காதுகளில்…

யாருக்குத் தெரியும்?
இழுத்துக் கொண்டு கிடக்கிறவரின்
இறுதி நினைவு இன்னதென்று!
யாருக்குத் தெரியும்?
பூர்வீக விட்டை வறுமையை எதிர்கொள்ள
விற்றுவிட்டுப் போகிறவனின்
இறுதிப் பார்வையின் பொருள்?
யாருக்குத் தெரியும்?
கடத்தப்பட்ட பள்ளிக் குழந்தையை
நாலு விலங்குகள் சிதைத்த பின்
சொன்ன இறுதி ரணச் சொல்
இப்படி…
யாருக்கும் தெரியாச் சொற்கள்
உண்டு கோடானு கோடி
காற்றின் காதுகள் மட்டுமே அறியும்
காலமானவனின்
கடைசி வார்த்தைகளை…
          - முனைவர். ச. மகாதேவன்

                                  பதிவுப் பதறல்கள்

எங்கும் எப்போதும்
உற்றுநோக்கிக் கொண்டேயிருக்கின்றன
கறுமைநிறச் சுழலும் காமிராக் கண்கள்.

யாவும் பதிவு செய்யப்படுகின்றன
முன்யோசனை ஏதுமின்றி
இயல்பாய் முகத்தைக் கோணலாக்கிச் செய்யும்
மூக்குச் சொறிதல் உட்பட

ஒரு குற்றவாளியைக் குறிவைக்க – நம்
அனைவரின் அசைவுகளையும்
வெட்கமின்றிப் பதிவு செய்கின்றன
அந்த எந்திரக் கண்கள்

தொடர்வண்டி நிலையங்களில்
துணியகங்களில் பேரங்காடிகளில்
அடுக்கக மால்களின்
ஆடை மாற்றும் அறைகளில்
கோவில்களில் குளியலறைகளில்
குற்றவாளிகளைப் பார்ப்பது போல்
நம்மைக் குறுகுறுத்துப் பார்க்கிறது.


முன்பெல்லாம்
போட்டோ எடுக்கும்
காமிரா மீது போர்வை போர்த்திப்
படமெடுப்பது வழக்கம்

இப்போது போகுமிடமெலாம்
நாம் போர்வை போர்த்திப்
போவதைத் தவிர
வேறு வழியில்லை…

                      - முனைவர். ச. மகாதேவன்

              மீனும் …. மீனாவும்


 அலங்கார மீன்களுக்கிங்கே
அடைக்கலம் வீடுகள்தோறும்
செவ்வகக் கண்ணாடிச் சுவர்களை
முட்டி முட்டி அங்குமிங்கும் அலைகின்றன
தங்கமென மின்னும் அலங்கார மீன்கள்.

ஆற்றுமீன்கள் வறுபடுவதென்னவோ
அடுக்களை வாணலியில்…
பாவம்…
         அதிலும் அவஸ்தை
அழகற்றவைகளுக்குத் தான்

மீனாகப் பிறந்தாலும்
மீனாவாகப் பிறந்தாலும்
அழகாயிருத்தல்
                                          அவசியம் போலிருக்கிறது.

                                                                 - முனைவர். ச. மகாதேவன்