மவுனயுத்தம்

          மின்சாரமற்றுப் போன
          காலைப் பொழுதுகளில்
           அழைப்பு மணிகள் அமைதி காக்க
            மரக்கதவுகள் அப்பணி செய்யும்

            சன்னலோர தாமிரபரணி
            ரசிப்புகள் கூட
                                                     நடத்துநரின் சீட்டு நச்சரிப்பில்
                                                     கடந்து சாகும்.

                      பாட்டியின் அரை நூற்றாண்டு
                      உரல் தளத்தில்
                      டேபிள் டாப் கிரைண்டர்கள் ஓடித்தொலைக்கும்

                      தாய்ப் பாலுக்கு அழும்
                     சம்பந்தர்களுக்குச் சற்றும் தாமதமில்லாமல்
                      செரலாக்குள் செய்து தரப்படும்

             சுப்புக் கோனாரின்
             நுரைத்துப் பொங்கும்
             செம்புப் பால்களை
            தூக்கி எறியப்படும்
             பால் பாக்கெட்டுகள்
             பதிலீடு செய்யும்

      நர்சரிக் குழந்தைகளின்
                        பாடத்திட்டத்தில்
                       முதியோர் இல்லங்களின்
                      முகவரிகள் இணைக்கப்பட்டிருக்கும்

                       என்ன செய்ய?
                      மண்டையோட்டை உடைத்தாலும்
                       மறுபேச்சு பேசாதிருத்தலைத் தவிர
    
                              - முனைவர். ச. மகாதேவன்

                            காலச்சக்கரம்

          தொடக்கமற்று முடிவுமற்று
          ஆச்சர்ய ஆரக்கால்களோடு
          வாழ்வுப் புள்ளியை மையமிட்டுச் சுழல்கிறது
          காலச்சக்கரம்.

    கிரகங்களினூடே உருண்டோடி
    சமுத்திர ஆழத்திலும் விழுந்தோடிச்
    சுக துக்கங்களை
    மானிடத்தில் மாட்டிவைத்துக்
    காலச்சக்கரம் காலம் கடந்து சுழல்கிறது
   
          கிளம்பிய இடமும்
          அடையும் இடமும்
          சற்றும் புலப்படவில்லை.

           பிறப்புக்கும் இறப்புக்கும்
           மத்தியில் பிரபஞ்சத்தைப்
          பிடிவாதமாய் சுழல வைக்கிறது

    இது விடுவித்த
    புதிர்களுக்கு விடைதேட முடியவில்லை

       காலத்தை அளந்திடுமா
         காலண்டர் தாள்கள்?
          காலத்தின் ஆழத்தை
          அளக்க முயன்றவர்கள்
          ஆழ மண்ணிற்கு
          அடியில் போனார்களே!

    காலத்தின் முன் காணாமல்
    போனவர்கள்
    உண்டாக்கிய மாயத்தோற்றங்கள்
    மானுடப் பரப்பெங்கும்

     நிலைக்காத நீர்க்குமிழிதானே 
    வாழ்க்கை
    அது சரி….
    காலம் எப்போது
    காலமாகும்? உங்களுக்கேனும் தெரியுமா?


                             - முனைவர். ச. மகாதேவன்


                   கம்பிக்கோப்பு...

முப்பது வருடங்களுக்கு முற்பட்ட
கம்பிக் கடிதக் கோப்பு
வெள்ளையடிக்கும் போது
தட்டோடி அறையில்
தற்செயலாய் கிடைத்தது

பஞ்சுமிட்டாய் நிற வண்ணம் பூசிய
மரக்கட்டை வட்டவில்லை
அதன்மையப் புள்ளியில்
தாத்தாவின் வளைந்த கைப்பிடியைப் போல
கம்பிக் குத்தல்

வரலாற்றை வாங்கியபடி
பழுப்பேறிய கடித உறைகள்
பதினைந்து பைசாக் கார்டுகள்

காலத்தைத் துளையிட்டுக்
கம்பியில் மாட்டிவைத்ததாய்
அடுக்கடுக்காய்
எங்கள் குடும்ப வரலாறுகள்
நாட்பதிவுகள் கடிதங்களாகக்
காலம் கடந்த பின்னும்இன்னும்
காலமாகாமல் கம்பீரமாய்

சின்னவயதில் நயினாத்தாத்தா கோபாலசாமி கோயில்
கோபுரத்திலேறிக் கோபித்துக் கொண்டு
குதித்ததில் அவரது சுண்டு விரல்
முறிந்ததைச்
சாரிப்பாட்டியின்
அறுபத்து மூன்றாம் வருடக்கடிதம் விளக்கியது

தட்டப்பாறையில்
கோயில் பூசை செய்யப்போன
பெரியதாத்தா
அபிஷேகம் செய்யும் அவசரத்தில்
தண்ணீர்க்குடத்தைப் போட்டு
பிள்ளையார் மண்டையை
உடைத்து விட்டு
சொல்லாமல் கொள்ளாமல்
ஓடிவந்ததாய்
அடுத்த கடிதம்

இதோ படித்துக் கொண்டிருக்கிறேன்
அந்த அறுபதாண்டு
அபூர்வ கடித வரலாறுகளை
இந்தக் கவிதையை
நீங்கள் படித்துக் கொண்டிருக்கும்
இப்போதும் கூட..

அறுபத்து மூன்றாம் வருடத்து
அந்த எழுத்துக்கள் மெல்லஎழுந்து
உயிரோடு உருண்டு
இதோ இந்த வரிகளுக்கான
வலிமையைத் தருகின்றன.

அது சரி
உங்களின் எந்தக் கணினி சேர்த்து வைத்திருக்கிறது?
அறுபது ஆண்டிற்கு
முற்போன என்
ஆதி முன்னோரின்
அழகான வாழ்க்கையை?


                 முடிந்த முடிவு

முடியலாம்
முடியாமலும்
போகலாம்
ஆனாலும்
முயல்வதில்
இருக்கிறது
முயற்சியின்
முடிவு
                                  - முனைவர். ச. மகாதேவன்

Blog Archive