தமிழ்த்தேன் அருந்துக


பூத்திருக்கும் மரங்களெலாம்
புவியின் புகழ்பாடக்
காத்திருக்கும்

பார்த்திருக்கும் உள்ளமெலாம்
பரவசத்தால்
வேர்த்திருக்கும்

வியர்த்திருக்கும் வான்பரப்பு
மழையாக மண்ணில்
ஈர்த்திருக்கும் வாசத்தை

கேட்டிருக்கும் குயிலோசை
மரச்சோலைதனில்
பாட்டிருக்கும் இசைக்கலைஞன்
மனம் போட்டிருக்கும்
நெஞ்சினிக்கும்
பாட்டாக
உள்ளிருக்கும் மதுத்துளியைக் கண்டு
கள்ளிருக்கும் எனக் கருதித் தும்பிக்கூட்டம்
                - முனைவர். ச. மகாதேவன் 


நாவுக்கருகே எந்திரம்

பித்தளை காபி
வட்டகைகளைக்
காகிதக்குவளைகள்
பதிலீடு செய்தன

பொத்தானை அழுத்தினால்
அளவாக நிரம்பும்
தேநீரும் குளம்பியும்
கசாயச் சுவையை விடக்
கொடுமையாயிருக்கிறது


தயவு செய்து
நாவுகளுக்கருகில்
மட்டுமாவது
இயந்திரங்கள்
வராமல் தடையுத்தரவு
வாங்குங்களேன்.
    - முனைவர். ச. மகாதேவன் 


      ஆல்பச் சிரிப்பு
நம் திருமண ஆல்பங்களைப் பார்க்கும் போதெல்லாம்
நாம் சிரமமாய் சிந்திய புன்னகை கண்டு
நமக்கே சிரிப்பு வருகிறது.
நம்மை அழகாக்க அப்புகைப்படக்கலைஞர்கள்
எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார்கள்?

தாடையில் கரம் பதிக்க வைத்துத்
தலைவியின் தோளில் சாய வைத்து,
குளிர்பானத்தை ஒரே உறிஞ்சு குழலில்
இருவரையும் பருக வைத்து,
மலை முகடுகளில், சோலைகளில் நிற்க வைத்து,
வல்லநாடு கூடத் தாண்டத நம்மைப் பலநாடுகள்
பார்த்ததாகப் பின்னணி சேர்த்து வரைகலையாக்கி
அட்டைப்படச் சிரிப்போடு
ஆல்பமாக்கித் தர எவ்வளவு பாடுபட்டிருக்கிறார்கள்?

ஆறேழு ஆண்டுகளுக்குப் பின்
குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில்
ஏற்பட்ட சண்டை முற்றிப் போய்
இரண்டு நாட்கள் பேசாமலிருந்தபோது
நாங்கள் சிரித்த பழஞ்சிரிப்புப் படப்பதிவைப்
மூத்த மகன் கொண்டு வந்து காட்டினான்
வயிறு வலிக்கச் சிரித்தோம்
எடுத்து ஆல்பமாக்க
ரஞ்சித் அப்போது அருகிலில்லை.

வாழ்வின் இனிய தருணங்களை
ஆவணப்படுத்தியதன் அவசியம்
அப்போது புலப்பட்டது.
        - முனைவர். ச. மகாதேவன்  


                              வாழ்த்துக்கள்
 


தாகுர் விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் 
ச.ராமகிருஷ்ணன் அவர்களை
"மகா பாரதி
"
  வாழ்த்துகிறது


பறிபோன பால் ஐஸ்கள்

முழுப்பரிட்சை விடுமுறை விட்ட நாளிலிருந்தே
தெருவெல்லாம் குழந்தை ஒலிகள்
ரிங்கா ரிங்கா ரோசாக்களாய்
ஒரு குடம் தண்ணி எடுத்து
ஒரு பூப் பூத்த மலர்களாய் என் நேசத்திற்குரிய குழந்தைகள்.
கயிறு கட்டி உள்ளுக்குள் ரயில் விடாத
குழந்தைகள் என்ன குழந்தைகள்?

ஜில் ஜில் விலாஸ் ஐஸ் பாக்டரியின்
சதுரப் பெட்டியின் மரக்கட்டை மூடியைச்
சப்தமாய் அடித்தபடி சைக்கிள் மணியோசையோடு
இதோ தெருவுக்குள் வந்து விட்டார் ஐஸ் மணி கிச்சா தாத்தா.

ஒரு ரூபாயோடு உள்ளிருந்து
ஓடுகிறான் என் மகன் பிரணவ்..
பாக்கெட் ஐஸோடு பழத்தை உள்ளேபோட்டுக்
கட்டையால் நைத்துத் தருகிறார்.
துளையிட்டுச் சூப்பி மகிழ்கிறான்
தம்பிக்காக அவன் தம்ளரில்
வாங்கி வைத்த பால் ஐஸ் உருகி
உள்ளுக்குள் குச்சி மட்டுமே.

ஐந்து நட்சத்திர மதிப்போடு
ஐஸ்கிரிமின் பத்து ரூபாய் பந்துகள் வந்தபின்
கிச்சா தாத்தாவோடு பாக்கெட் ஸ்களும்
பால் ஐஸ் குச்சிகளும் காணாமல் போனது

தம்பிக்காகத் தம்ளரில் ஏந்தவோ
உள்ளங்கையில் அடக்கி உச்சிவெயிலில்
ஓடவோ இயலாத
தெருக்களானது எங்கள் நெருக்கடி மிகுந்த தெருக்கள்

                          - முனைவர். ச. மகாதேவன்  


   வதுவை மொய்கள்

நூறு ரூபாய் பரிசுப்பொருட்கள் வந்த பின்பு
நோட்டோடு மொய் எழுதுகிற
பொறுப்பான பெரியவர்கள் அவசியமற்றுப்
போய்விட்டார்கள்...

பிரம்மம் பிரசாபத்தியம் ஆரிடம் ராக்கதம்
பைசாசம் கந்தர்வம்
என்று எண் வகையாய் ஏற்றம் பெற்ற
மன்றல் விழாக்கள் இன்று
வாழ்த்துச் செய்தியை அச்சிட்ட ஐம்பது பைசா மொய்க் கவரோடு
முற்றுப் பெறுவது அவ்வளவு சரியாயில்லை.

தூர எறிகிற கண்ணாடிக் குவளைகள்...
ஓடாத கடிகாரங்கள், பீங்கான் குவளைகள்
என்று மணவீட்டில் பரிசளிப்பதற்காகவே
நூறு ரூபாய்க்குள் செய்து தரப்படுகின்றன
இந்தப் பரிசுப்பொருட்கள்....

ஒளிப் பதிவிற்காகக்
குழுப்புகைப்படத்திற்காக
வண்ணக் காகிதங்களால்
புனையப்பட்ட பயனற்ற பரிசுகள்
ஒவ்வொரு மணவீடுகளிலும்
பாவம் அவற்றை வைத்து
அவர்கள் என்ன செய்வார்கள்?
வேறொரு புதுவண்ணக் காகிதம் சுற்றி
இன்னொரு திருமணத்திற்குத் தருவதைத்தவிர!
                   - முனைவர். ச. மகாதேவன்  


அதிகாலைக் கனவு


கனவுகள்...
கண்டதைச் சொல்லும்
காட்சி ஊடகங்கள்
மயக்க மனதின் மாயக்கண்ணாடிகள்

ஆதி மனிதனின் அடிமனப்பயச் சுவடுகளாய்
உடலில் ஊர்ந்து நம் எலும்புகளை
முறிப்பதாய் ஆதிக்கனவுகள் பாம்புவடிவில்

சாவுக் கனவுகளில் சங்கொலிகள், சிகண்டிகள்
மஞ்சள் பூத்தூவல்கள் முறுக்கு, பழ எறிதல்கள்
யாவுமுண்டு

திருப்பதி ஏழுமலையான் வந்தார் ஓர் நாள்
வைர அலங்காரத்தில்
போன வருடம் இறந்து போன
பாட்டி வந்தாள்...
பசி தாங்க முடியவில்லை எனக் கதறி அழுதாள்

செஞ்சீலையணிந்து
ஜல்...ஜல்சப்தத்தோடு எங்கள் தெரு
உச்சினிமாகாளி ஒரு நாள் வந்தாள்.

அந்த அதிகாலைக் கனவு
என்னுள் அதிசயம் ஊற்றிற்று
முப்பத்தொன்பது வயதான பின்னும்
அழகாயில்லை என அனைவராலும்
புறந்தள்ளப்பட்ட தெப்பக்குளத்தெரு
செண்பகத்தக்காவின் கல்யாணம்
சாலைக்குமாரசுவாமி கோவிலில்
நடப்பதாய் நான் கண்டகனவு மட்டும்
இன்னும் மறக்கவேயில்லை.

அதிகாலைக் கனவென்பதால் அந்த
அதிசயம் நடக்குமென
அடுத்த கனவைக் காணாமல்
காத்திருக்கிறேன்.
             - முனைவர். ச. மகாதேவன்  


  கதவு நினைவுகளை


பள்ளத்தில் கிடந்த பழைய வீட்டை இடித்துப்புது வீடு
கட்டியதில் நினைவின் எச்சம்
அந்தத் தேக்குக் கதவு மட்டும்தான்

நெற்றியால் யானை முட்டி உடைத்துவிடக் கூடாதெனக்
கோவில் கதவுகளில் பதிக்கப்பட்ட கூரிய இரும்புப் பூண்கள்
எங்கள் வீட்டுக் குட்டைக்கதவிலும் வைத்த
காரணத்தை அறிய முடியவில்லை.

ஐந்து வருடங்களுக்கு முன்
பொங்கல் சமயத்தில் பச்சரிசிமாவில் முக்கி
இலஞ்சிப் பெரியம்மை பதித்த கரச்சுவடு
மங்கினாலும் இன்றும் கதவிலிருக்கிறது

கதவிலேறி நாங்கள்
ஆடிக் கை நைத்து அப்புறம் அப்பாவிடம் அடிவாங்கியது
இன்றும் நினைவிருக்கிறது.
 
ஒரு நாள் கோபத்தில் அப்பா
அறைந்து சாத்தியதில்
வாலறுபட்டு பல்லி வலியால் துடித்தது
மனதின் தீரா ரணம்.

புதிய வீட்டு ஏழடி நிலைக்குப்
பொருந்தாததாலும்
பிள்ளையார் டிசைன் போட்ட
அந்தத் தேக்குக் கதவு இன்று
புறவாசலில் கிடக்கிறது உளுத்துப் போய்.


ஓட்டை விழுந்து
பழைய நினைவுகள் வந்தால்
அக் கதவருகே சென்று
புதியன கண்டு பழையதைத்
தூர எறிந்த குற்றமனதோடு
கண்ணீர் மல்கப் பார்த்திருப்பேன்
வேறென்ன செய்ய
           - முனைவர். ச. மகாதேவன்  


                   அன்பின் கருவி

வெயில் வந்தால் உற்சாகமாகிவிடுவாள் பாட்டி
மகளின் வரவுக்காய்
மாவடு போட்டுக் காத்திருப்பாள்.

முந்தைய நாளே சவ்வரிசியை ஊறப்போட்டுச்
சூரிய உதயத்தி்ற்கு முன்பே கூழ் வத்தலைக்
காய்ச்சி மொட்டை மாடிக்குப் போயிருப்பாள்

தாத்தா வேட்டி தரையில் விரியும்
சுடச்சுட கூழ் வத்தலைப் பாட்டி கையால் இட்டுக்
கடைசி வரிசை முடிக்கும் போது
சூரியன்
சுள்ளென்று சுடும்.

கருப்புத் துணியைக்
கம்புமேல் கட்டி
காகத்தைத் தடை செய்வாள்.

அடுத்த நாள் விடியலிலும்
அவசரமாய் எழுந்து
வேட்டியின் மறுபுறம்
தண்ணீர் தெளித்து
வற்றலை உத்தெடுப்பாள்

வற்றல் வாணலியில் பொரியும் கணத்தில்
மகள் வந்திருப்பாள்

வெயிலைக் கூட
அன்பின் கருவியாக்கச் சாரிப்
பாட்டியால் மட்டுமே முடியும்
                      - முனைவர். ச. மகாதேவன்