ஆல்பச் சிரிப்பு
நம் திருமண ஆல்பங்களைப் பார்க்கும் போதெல்லாம்
நாம் சிரமமாய் சிந்திய புன்னகை கண்டு
நமக்கே சிரிப்பு வருகிறது.
நம்மை அழகாக்க அப்புகைப்படக்கலைஞர்கள்
எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார்கள்?

தாடையில் கரம் பதிக்க வைத்துத்
தலைவியின் தோளில் சாய வைத்து,
குளிர்பானத்தை ஒரே உறிஞ்சு குழலில்
இருவரையும் பருக வைத்து,
மலை முகடுகளில், சோலைகளில் நிற்க வைத்து,
வல்லநாடு கூடத் தாண்டத நம்மைப் பலநாடுகள்
பார்த்ததாகப் பின்னணி சேர்த்து வரைகலையாக்கி
அட்டைப்படச் சிரிப்போடு
ஆல்பமாக்கித் தர எவ்வளவு பாடுபட்டிருக்கிறார்கள்?

ஆறேழு ஆண்டுகளுக்குப் பின்
குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில்
ஏற்பட்ட சண்டை முற்றிப் போய்
இரண்டு நாட்கள் பேசாமலிருந்தபோது
நாங்கள் சிரித்த பழஞ்சிரிப்புப் படப்பதிவைப்
மூத்த மகன் கொண்டு வந்து காட்டினான்
வயிறு வலிக்கச் சிரித்தோம்
எடுத்து ஆல்பமாக்க
ரஞ்சித் அப்போது அருகிலில்லை.

வாழ்வின் இனிய தருணங்களை
ஆவணப்படுத்தியதன் அவசியம்
அப்போது புலப்பட்டது.
        - முனைவர். ச. மகாதேவன்