கதவு நினைவுகளை


பள்ளத்தில் கிடந்த பழைய வீட்டை இடித்துப்புது வீடு
கட்டியதில் நினைவின் எச்சம்
அந்தத் தேக்குக் கதவு மட்டும்தான்

நெற்றியால் யானை முட்டி உடைத்துவிடக் கூடாதெனக்
கோவில் கதவுகளில் பதிக்கப்பட்ட கூரிய இரும்புப் பூண்கள்
எங்கள் வீட்டுக் குட்டைக்கதவிலும் வைத்த
காரணத்தை அறிய முடியவில்லை.

ஐந்து வருடங்களுக்கு முன்
பொங்கல் சமயத்தில் பச்சரிசிமாவில் முக்கி
இலஞ்சிப் பெரியம்மை பதித்த கரச்சுவடு
மங்கினாலும் இன்றும் கதவிலிருக்கிறது

கதவிலேறி நாங்கள்
ஆடிக் கை நைத்து அப்புறம் அப்பாவிடம் அடிவாங்கியது
இன்றும் நினைவிருக்கிறது.
 
ஒரு நாள் கோபத்தில் அப்பா
அறைந்து சாத்தியதில்
வாலறுபட்டு பல்லி வலியால் துடித்தது
மனதின் தீரா ரணம்.

புதிய வீட்டு ஏழடி நிலைக்குப்
பொருந்தாததாலும்
பிள்ளையார் டிசைன் போட்ட
அந்தத் தேக்குக் கதவு இன்று
புறவாசலில் கிடக்கிறது உளுத்துப் போய்.


ஓட்டை விழுந்து
பழைய நினைவுகள் வந்தால்
அக் கதவருகே சென்று
புதியன கண்டு பழையதைத்
தூர எறிந்த குற்றமனதோடு
கண்ணீர் மல்கப் பார்த்திருப்பேன்
வேறென்ன செய்ய
           - முனைவர். ச. மகாதேவன்