தனித்த மனம்

பச்சை அட்டை வாங்கிப்
பக்கத்து நாட்டுக்குக்
கூண்டோடு பெயாந்து போய்விட்ட
என் மகன் குறித்தோ

பக்கத்துத்
தெருவிலிருந்த போதும்
பாக்க்க் கூட வராத
என் மகள் குறித்தோ
இப்போது வருத்தமேதுமில்லை.

வேளா
வேளைக்கு வரும்
என்ஜியோ காலனி எடுப்புச்
சாப்பாட்டுக் காரனும்
மாலையில் கூடிப் பேசும்
ராமா கோவில் நண்பா குழாமுமே
பின்னாளில் சாசுவதம் என்று
தொந்திருந்தால்
திருமண நாளன்று
திருப்பதி போயிருப்பேன்.
                                           முனைவர்.ச.மகாதேவன்

  திறந்தே இருக்கிறோம்

என் காயங்களும் நானும்
திறந்தே இருக்கிறோம்
என்  ரணங்களை நான்
கட்டுப் போடாத்தால்
நாவினால் சுட்ட வடுக்கள்
நாலைந்தை நீங்களும்
கண் கூடாய் பாக்கலாம்.
வலியறியும் விரல்களை
வருடிக் கொடுக்கிற விரல்களை
எதா பாத்து நாங்கள்
தினமும் திறந்தே இருக்கிறோம்.
மனதும் மனித நேயமும்
இருந்தால்
என் ரணங்கள் உங்களால்
குணமாகலாம்.
                                        முனைவர்.ச.மகாதேவன்

மரணித்த மரம்


முள் மரங்களை அரைத்துக்

காகிதம் செய்துவிட முடிகிறது.

கல் மரங்களைக் காட்சிப்படுத்திக்

காசு சம்பாதித்துவிட முடிகிறது.

சொல் மரங்களை அடுக்கி

ஆட்சியைப் பிடித்து விட முடிகிறது

இருக்கிற இரண்டொரு

மரங்களையும் இழந்து.

                                           முனைவர்.ச.மகாதேவன்

 


உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தின ஜீன் 5 விழிப்புணர்வுக் கவிதை
                    அதுவரை ஓய்வில்லை…
                                                     
                                                              
                                                                                யாரப்பா அது!

உலகப்பந்தை உயிரோடு புதைப்பது?

தவலைப் பானையில் வெந்நீர் போட்டது மாதிரி

கவலைப் பானையில் கண்ணீரை நிரப்பியது யார்?

துருவப் பகுதிகளில் பனிப்பாறைகள் உருகினால்
         தூத்துக்குடிக் கடல், பாளை வரை பரவுமப்பா!

பதை பதைக்கவில்லையா நெஞ்சம்?

அன்று ஓசிக்காற்றை ஒய்யாரமாகச் சுவாசித்தவன்

இன்று ஏசிக்காற்றுக்கு ஏங்குவது ஏனப்பா?

வெப்பத்தை உருட்டிக் கக்கத்தில் வைத்துக் கொண்டது போல்

துக்கத்தில் துடிக்கிறதப்பா தூய பூமி!

வெட்கத்தை விட்டுச்சொல்...

உனக்கும் இதில் பங்கில்லையா?

எருமைக்குரல் ஒலியெழுப்பிகளை மாட்டியபடி - சாலைகளில்
இருசக்கர ஊர்திகளில் நீ பறக்கும் போது

மருத்துவமனைகளின் மண்டையோட்டை நீ உடைக்கவில்லையா?

கொசு மருந்து வண்டிகளைப் போல

கரும்புகைக் கக்கிப்போகும் உன் வாகனங்களால்

பயணச்சாலைகள் சுடுகாடுகளாய் மாறிவிடவில்லையா?

ஓசோன் குடைகளில் ஓடிப்போய் ஓட்டை போட்டவனே!

உன் தோலெல்லாம் தொழுநோய் வரச்சம்மதமா?

வயல்களை உழுது உரத்தால் நிரப்பினாய்!

காய்கனிகளை எல்லாம் வேதியியல் கிடங்காய் மாற்றினாய்!

கழிவுத் தொட்டியாய் தாமிரபரணியை மாற்றினாய்!

பிளாஸ்டிக் அழிவுகளால் உலகத்தைத்தாக்கினாய்!

குருதி முதல் சாம்பார் வரை பாலிதீன் பைகளில் தேக்கினாய்!

இயற்கையே சுகமென்றிருந்தவனின் இதயத்தைத் தாக்கினாய்!

நுரையீரலோடு தப்பாமல் தண்ணீர்ப் பாட்டிலையும் தூக்கித் திரிபவனே! –

இனி

உயிர்க்காற்றுக்கு உரிய உத்திரவாதம் இல்லாததால்

வாயு உருளைகளை வயிற்றில் கட்டிக்கொண்டு திரியப் போகிறாயா?

மரங்களின் மரணத்திற்கு மனுப்போட்டு விட்டுத்தானே

நான்கு வழிச் சாலைகள் அமைக்க நாள் செய்தாய்!

விழிப்புணர்வுக் கவிதை

அதுவரை ஓய்வில்லை…

  திருச்செந்தூர்ச் சாலையில் வானுயர்ந்து இருந்த

மருதமரங்களின் இடத்தில் இப்போது சிக்னல்

மரங்கள் சிக்கலாய் சிரிக்கின்றனவே!

உன் மின்சார ரம்பங்கள் படாமல்

மிச்சசமிருப்பது கோயில் கொடி மரங்கள் மட்டும்தானா?

  குளங்களைக் குறிவைத்தாய் – பாவம்

அவற்றில் பேருந்துகள் நிற்கின்றன.

நதிகளைக் குறி வைத்தாய்

அவற்றைப் பொக்லைன்கள் தின்கின்றன.

  இயந்திரங்களோடு நீ எங்கே சென்றாலும்

இடரென்னவோ இயற்கைக்குத்தான் எப்போதும்!

ஜீன் – 5

v இது கொண்டாடப்பட வேண்டிய தினமன்று

கழிவுகளின் அழிவுகளைக் கண்டு நாம்

மாற வேண்டிய தினம்

v இனி ஒரு விதி செய்வோம்...

தனி ஒரு வழி செய்வோம்...

இற்றுப் போகும் சுற்றுச்சூழலைப்

பற்றிப் பாதுகாப்போம்

அதுவரை ஓய்வில்லை.


             - முனைவர். ச. மகாதேவன்

விகடன் வார இதழில் இடம்பெற்ற எமது கல்லுரி முத்துக்களுக்கு மகா பாரதியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்



முகம்

               



என் முகந்தனிலே
முழுசாய் பல முகத்திரைகள்
சொந்த முகந்தனைச்
சொக்கப்பனைக்
கொளுத்தி விட்டுப்
போலி முகங்களைப்
போர்த்தித் திரிகிறேன்
எவரெவர் முகமோ
என் முகமாய் ஆனது
என் முகமோ
எங்கோ போனது.

             முனைவர்.ச.மகாதேவன்


-மனம்-

                        

ஊதுபத்தியாக நீ 
ஊருக்கு உழைத்தால்
மரணித்த பின்னும்
மணத்தோடு
இருப்பாய்


               

எதிர் இணைகள்

தாஜ் மகாலுக்கு முன்னரும்
தட்டேந்திய சிறுமிகள்
அதிசயங்களும்
அவலங்களும்
அருகருகே
அழுக்கை அழிக்கும் ரப்பர்
அழுக்காயிருப்பதைப் போல....
             
- முனைவர். ச. மகாதேவன்  www.mahatamil.com                                                

       
பியூசான குழல் விளக்கிற்கு
ஒருபடி உப்புத் தந்து
சைக்கிளில் உப்பு வியாபாரம்
செய்துவந்த சந்தைப் பேட்டை
ராசையாவின் பிழைப்பிலும்
பன்னாட்டு உப்பு நிறுவனங்களின்
அயோடின் அலறல் அறிக்கை
மண்ணை அள்ளிப் போட்டது

கீரை விற்கவாவது போகலாமென்று
போனால்
பேரங்காடிகள் அவன் பிழைப்பில்
மண்ணள்ளிப் போட்டான.
பேரங்காடிக் சுவர்களில்
கணினி விலைக் குறியீட்டுடன்தான்
இனி
கீரைகள் விற்கப்பட வேண்டுமாம்.

இவர்கள் புகாத
தொழில் இருந்தால்
சொல்லுங்கள்
அவன்
பட்டினியில் சாவதற்குள்


                        - முனைவர். ச. மகாதேவன்  www.mahatamil.com 

    எழுத்தாளர் நாகூர் ரூமி மற்றும் மேலும் சிவசு ஆகியோருடன் பேராசிரியர் முனைவர். ச. மகாதேவன்,

 


விஜய் டிவி யின் நீயா நானா நிகழ்ச்சியில் முனைவர் ச.மகாதேவன் அவர்களின் கவிதையைப் பாரட்டிய எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி



எங்கள் கவிதையை வெளியிட்ட  
  ஆனந்த விகடனுக்கு மகா பாரதி
நன்றியை தெரிவித்துக்கொள்கிறது     

 எலிகளானோம் நாம்(பக்கம் எண் 20)   

உன் உயிர் பிரியும் இறுதிநாளுக்கு
முந்தைய நாள் வரை நீ சகஜமாகத்தானிருந்தாய்
மரணத்தின் விடியல் என்றறியாமல் துயிலெழுந்து
பல் துலக்கிப் பலகாரம் உண்டு
பாளை பஸ்நிலையம் ஓடி
பேருந்து பிடித்துப் பதறிப் பணி செய்து
வண்ணாரப்பேட்டை பேராச்சி அம்மனைத் தரிசித்து
மகனைப் பற்றிக் கவலைப்பட்டு
மகளறியாமல் அவள் செல்பேசிய எண் பார்த்து
ஆயாசத்தோடு படுக்கப் போகும் வரை
நீ அறியாத உன் மரணம்
உன் காலுக்குக்கீழே தான் பரவிக்கொண்டிருந்தது
வாளியிலிருந்து சிந்திய தண்ணீர்
தரையில் பரவுவதைப் போல்
அடுக்களை இருட்டிலிருக்கும்
பூனையைக் கவனிக்காமல்
அதன் எதிரில் உலவும் எலிகளானோம் நாம்



தேடி ஓடி

தேடிச் சோறள்ளித் தின்றுத்
தெருத் தெருவாய் வேலைக்கலைந்து
ஓடிப் பேருந்து பிடித்து
பணி செய்து, பிணி பல ஏற்று
நாடிப் பெண் தேடிக் காதலித்து
நடுத்தெருவில் விட்டுப் பிரிந்து
மற்றொரு பெண் பார்த்து
மணமாலையிட்டு
மழலைபெற்று கவலையோடு வாழக் கற்று
நரைகூடி எமவண்டியேறி
அப்பால் போகிறோம்
வேடிக்கை மனிதராய்

பனை இணை
பரியா மருதபட்டிப் பனைதேரியில்
நொங்கு நோண்டித் தின்ற
பெருவிரலின் நகக்கணுவில் இன்னும்
ஈரம் மிச்சமிருக்கிறது
அப்புறம் ஓட்டிய நொங்கு வண்டியின்
பளபளப்பு கண்களின் ஓரம் இன்னும்
மிச்சமிருக்கிறது.
விடுமுறைக்குப் போன புதுப்பட்டிப்பாட்டி
வீட்டுப் பனையோலைக் குடிசை
இன்றும் வாழநினைக்கும் வசந்தசொர்க்கம்
வாசக் குளிர்ச்சியால் மனதை வருடிய
பனையோலை விசிறிக் காற்று
தொட்டிலைச் சுமந்த உத்திரம்
நிலத்தைப் பதிந்துவைத்த பனையோலைப் பத்திரம்
யாவும் பனைதான்
யாவும் பனைதான்
என்றும் நம் மானுடத்தின்
இன்பியல் இணைதான்

Blog Archive