நிலத்தாலாட்டு

குட்டி நிலாவை முதன் முதலாய்
பள்ளத்தில் பார்த்தது புதுப்பட்டிக்
காமாட்சிப் பாட்டி வீட்டுக் கேணியில்தான்

கோடை விடுமுறைக்கு எப்போது சென்றாலும்
படிகளில் ஏறிக் கேணிக்குள் முகம் பார்த்தபின்தான்
சாப்பாடு கீப்பாடு எல்லாமே!

ஊரணிக் கருகே இருந்ததால்
வற்றிப் போக வாய்ப்பற்று ஊறியது

தங்கை தவறவிட்ட வாளியிலிருந்து
எல்லாவற்றையும் எடுத்துத் தரும்
பாதாளக் கரண்டியை அதிசயத்தோடு
முதலில் கண்டதும் அங்கேதான்

ஐந்து வயதில் கேணிக்குள்
விழுந்த அம்மாவை
இடுப்புக் கயிறுகட்டி உள்ளிறங்கித்
தூக்கிவந்த மருதையாத்தாத்தா முதல்
எத்தனையோ மனிதர்களின்
வரலாறுகளை ஊற்றுக்குள்
ஒழித்துவைத்திருந்தது அக்கேணி

கட்டியவனின் குத்துச் சொல் தாளாமல்
அதே கேணிக்குள் செத்து மிதந்த
ஆனந்தி அக்காவின் சடலத்தைப்
பார்த்தபின்
கேணிக் குளியலும்,
நிலா ரசித்தலும்
நின்று போனது.
ஆனாலும் கவலைகள் ஏதுமற்று
நிலவுக்கு நிலத்தாலாட்டு நடத்திக் கொண்டிருக்கிறதுஅக் கேணி.                      
                                                              - முனைவர். ச. மகாதேவன்