போலித்தனம்

சவத்தைச் சுற்றி ராப்பிணம் காத்து
கதறியழுகிற முகங்களில் போலித்தனம்
கோரப் பற்களாய் முன் துருத்தி நிற்கிறது

மனிதர்கள் வர வர நினைவு நாடாக்களை
நீட்டி இழுத்து இறப்பிற்கு முந்தைய நிமிடங்களை
மறுபடியும் மறுபடியும் விளக்குகிறான் அவன்
சோகமாய் முகம் வைத்துச் சொல்வதைக் கேட்கிறார்கள் அவ்வப்போது வருகிறவர்கள்.

நேற்றுவரைக் கட்டிப் புரண்டுச் சண்டையிட்டவனும்
ரோஜா மாலையோடு வந்தழுது
இன்னா செய்யா இனியவனாய் தன்னைத்
தரமுயர்த்த முயற்சிக்கிறான்

எதையும் விளங்கிக் கொள்ள
இயலா இயலாமையோடு
நீர் மாலை ஏற்கத் தயாராய்
இன்னும் விரைப்பைக் கூட்டுகிறது சவம்

பிணக் குறிப்பறியாப்
பிள்ளைகளானோம் நாம்
                       - முனைவர். ச. மகாதேவன்  www.mahatamil.com