நெஞ்சைத் தைத்த நெருஞ்சிமுள்
விஷக் கோடுகளை
விபரீதம் தெரியாமல் கடந்ததால்
கவிழ்ந்து காலமான கரப்பான பூச்சிகளைப்போல்
ஏதேனும் ஒரு கோட்டினைக்
கடந்து காலமாகிறோம் சிறுவன்தில்சனைப்போல்

விசா இல்லாமல் எல்லை கடந்தவனைச்
சுட்டுக் கொன்றதைப் போல்
வாதங்கொட்டை பொறுக்கப் போனவன்
சுட்டுக் கொல்லப் பட்டானே!

வண்ணத்துப் பூச்சியை
வன்முறை சின்னா பின்னமாக்கியது
கெட்டுப் போன எண்ணச்செயலால்
பட்டுப் போனது அந்தப் பட்டுப் பூச்சி

விஷக் கோடுகளை
விளங்கிக் கொள்ள
அனுபவமற்ற அந்தக்
குருத்து கொல்லப்பட்டது
என்றும்
நெஞ்சில் தைத்த நெருஞ்சிமுள்ளே!

                  
                                            - முனைவர். ச. மகாதேவன்