பறவை செய்யும்

கால மரத்தின் கடைசிச் சருக்காய்

வனத்தில் அலையலையாய் பறந்து

மண்ணில் விழுந்து கொண்டிருக்கிறது

அம் மனிதச் சருகு.


கால மரணங்களின் அடிச்சுவட்டில்

ஆதம் தொடங்கி அனைவரும் மரித்தபின்

மிச்சமிருந்த அவனும் இறந்து போனான்


சிவலோகப் பதவியடைந்தாரென்றோ

வைகுண்டப் பதவியடைந்தாரென்றோ

கர்த்தருக்குள் நித்திரையடைந்தாரென்றோ

வஃபாத்தானார்களென்றோ

விளம்பரம் தர யாருமற்ற

ஈடு செய்ய முடியா இழப்பென்று,
வருந்த வாய்ப்பு மற்று,

தூக்கிப் போக யாருமற்று,

ஈமக் கிரியை செய்ய யாருமற்று

செத்துக் கிடக்கிறான்

அந்தக் கடைசி மனிதன்


ஒரு வேளை பருந்துகள்

அப்பணியைச் செய்யலாம்

ராமன் சடாயுக்குச் செய்த

நன்றிக் காய்
           - முனைவர். ச. மகாதேவன்