...பரணி அம்மா....

வைகறை யாமம் துயிலெழுந்து
குளிர்கோர்த்த உணர்வுடனே
நதியில் நீராடத் தாமிரபரணி
நோக்கி நடந்தன கால்கள்.

கரையோர மயானங்களின்
கடைசிச் சாம்பலொடு
ஓழியாது ஓடியது தளரா அத்தண்நதி

தீரத்தீர மண்ணள்ளித் தீண்டியாயிற்று அவளை
சோரத் சோரச் சாக்கடைகள்
கொண்டு சேர்த்தாயிற்று
முட் காடாக்கியாயிற்று.

நதிக்குள் இறங்குகிறேன்....
கண்ணாடித் துண்டுகள்
காலைக் கிழித்துச் சிவக்க வைக்கின்றன.

மலையில் வழிந்து,
மனிதர் தலையில் விழுந்து,
கலையாய் நிலத்தில் படரும்
அவள் உடல் பரப்பெங்கும் படுகுழிகள்

நிசப்தமாய் நீள்கின்றன
அவளின் கதறல்கள்

தடதடத்து மண்ணள்ளும் லாரிகள்
நதிக்கரையில் நுழைகின்றன.
மடியைக் கிழித்து
மண்ணை எடுக்கின்றன
    அந்த அரக்கக் கைகள்

இன்னலின் பின்னலில்
இன்றும் என் பரணியம்மா
என்று தீரும் அவளது சோகம்?

                                     - முனைவர். ச. மகாதேவன்