எழுத்து படும் பாடு

மூடு காலணிகளுடனும்
கழுத்துப் பட்டையுடனும்
கைநிறைய தலையணையளவு
புத்தகங்களுடனும் அவன்
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்
வீட்டு வாசலுக்கு வந்து விடுகிறான்

அறிவியல் புத்தகங்களோடு வந்தான்
போன வாரமே கல்லூரியில் வாங்கிவிட்டேன் என்றேன்.
புதினத்தோடு வந்தான்
படித்துவிட்டேனே என்றேன்.
இன்று அகராதியோடு வந்திருக்கிறான்
என்ன சொல்வதெனத் தெரியாமல்
மனைவியிடம் இல்லைஎனப்பொய்
சொல்லச் சொன்னேன்.

இருந்தும் இல்லாமல் போன நான்
இல்லாமலிருந்தாலும்
இன்றும் வாழும் சி.சு. செல்லப்பாவை
நினைத்துப் பார்த்தேன்

எழுத்து இதழோடு தலைச்சுமையாய்
கல்லூரிகளைத் தேடி அலைந்த
அவரையும் இந்தப்பாடுபடுத்தியிருப்பார்களே!