எழுதாத பேனாக்களையும்
எடுத்தெடுத்து வைத்திருப்பார் 
அப்பா
தொலைபேசி எண் குறிக்கவோ
அவசரமாக ஏதோ எழுதவோ
எடுத்து எழுதினால்
மையற்று  
எழுத்தின் தடம்
மட்டும் தெரியும் .
ஆனாலும் அவற்றைத் தூரப் போட 
அப்பாவுக்கு மனசுவராது
சில நேரங்களில் தேய்ந்துபோன
குட்டைப் பென்சிலைக் கூட
அவர் மாட்டி எழுதிப் பார்த்திருக்கிறேன் .
அது சரி
அடுக்கடுக்கடுக்காய்
 ஆயிரம் பேனாக்களை
வைத்திருக்கும்
பேனாக் கடைக்காரன்
என்ன எழுதுவான் தன் கடைப் பெயரைத்
தவி

சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி



வெள்ளையடிப்பு நாட்களில் ஒட்டடைக் குச்சியால்
 நூலம்படையைச் சுத்தம்
செய்தபோது நாலாபுறமும் சிதறி ஓடிய சிலந்திகளைப் பார்க்கும் போதெல்லாம் மே மாதத்து  மாற்றல் உத்தரவு கண்டு  மூட்டை முடிச்சுகளுடன் மைசூருக்கும்  நாகாலாந்துக்கும் ஓடும் பக்கத்து வீட்டு லில்லி அப்பா காரணமின்றி நினைவுக்கு வருகிறார் 



அரைத்த சூடு தீரச்
செய்தித்தாளில்
ஆறப்போடுகிற
ரைஸ் மில்காரனாய்
நமை அரைத்துச்
சில நேரம்
ஆறப்போடுகிறது
வாழ்க்கை எனும்
 வட்ட எந்திரம் .


சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி 



. மொட்டை மாடிக் கவளச் சோறு
வேனிற்கால மண்பானை நீர்
முருகன் தியேட்டர் கல் முறுக்கு
ஆனித்தேர் வடம்
பதினெட்டாம் பெருக்கு நதி
தசரா காளி வேடம்
ஜீவ ஜோதி மிட்டாய்
வாழைப் பழம் போட்டு
அடித்துத் தந்த பாக்கெட் ஐஸ்
கை விட்டுப் பரந்த
 சி .பி .வாடகை சைக்கிள்
கலர்க் கோழிக் குஞ்சு
இப்படிப்பட்ட பட்டியலில்
 இன்னமும் உண்டு சொல்லாத பலவும்
இறுகிய கான்க்ரீட்டாய்
இதயம் மாறிய பின்
இளக்கம் பற்றி
என்ன கவிதை வேண்டிஇருக்கிறது ?


சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி 



கருவேல மரங்களே
காகிதமாகும் போது
நாம்
கவிதையாக முடியாதா ?


      சௌந்தர மகாதேவன்