மண் காக்க வந்த மகா பாரதியே!

எட்டயபுரத்து எரிமலைப் பாட்டே!
இயங்கிய இதயங்களின் கவிதைத் துடிப்பே!

தூங்கிக் கிடந்த எம்மினத்தைத்
தாங்கிக் கிடந்த அடிமைத்தனத்தைக் கவிதை
டாங்கி கொண்டு நீ சுட்டாய்
“மகாபாரதி“ என இறவாப்புகழ் பெற்றாய்.

பெண்ணியம் பேசிய தமிழ்ப் பெம்மானே – தமிழ்
பண்ணிய உயர் புண்ணியம் நீதானே!
தண்ணிய தமிழை நீ தரணியில் உயர்த்தினாய்
திண்ணிய நெஞ்சத்தோடு நீ பாரதத்தைத் திருத்தினாய்

மதிதா... மதிதா என்று பராசக்தியிடம் பாதம் பணிந்தவனே!
'விதிவா... விதிவா' என உன்னை
விரைந்து அழைத்த போதும்
காலனை உன் காலருகே இட்டு
மிதித்தவனப்பா நீ!

உன் கவிதைக்கண் சிவந்ததால்
இந்த அடிமைமண் சினந்தது

யாப்புக்குள் அடங்கிய வெண்பா
உன்னால் எழுச்சிமிக்க பெண்பாவானது.

நீ இந்திய இருட்டு தீர
சுதந்திர வெளிச்சம் தந்த
கவிதைச் சூரியன்

அந்நியரின் திறவாக் கதவுகளை உடைத்தது
உன் இறவாத் தமிழாயிற்றே!
உதயம் தந்த உன்னதச் சூரியன் என்றாலும்
அஸ்தமனங்கள் உனக்கு என்றுமில்லை 
                                               - முனைவர். ச. மகாதேவன் 

                                         புத்தர் ஆசைப்பட்டார்

ஆசைகள் ஏதுமற்ற உயரிய ஆன்மபீடத்தில்
புத்தர் தியானத்திலிருக்கிறார்.
சலனம் ஏதுமற்ற
நிசப்தம் பிரபஞ்சமெங்கும்

அமைதியாயிருந்த அந்த அறைக்குள்ளே
துறுதுறுப்பாய்
குழந்தைகள் உள்நுழைகின்றன...
தலைகீழாக்குகின்றன
அந்த இனிய இல்லத்தை

புத்தரை உறவு சொல்லி அழைக்கிறது
ஒரு குழந்தை
சின்னஞ்சிறு இறகால்
வருடுவிடுகிறது இன்னொன்று
மம்மு சாப்பிடச் சொல்கிறது பிறிதொன்று

இறுக்கத்தைக் கலைத்த புத்தர்
இறங்கி விளையாடத் தொடங்கினார்
புத்த தத்துவமாய் மாறின அக்குழந்தைகள்
அன்றிலிருந்து
ஆசைகள் அவருக்கும் அவசியமாயின

                                                    முன்பதிவு

வீடு கட்டும் செங்கலில் தொடங்கி சிறு வீடு கட்டும்
பொங்கல் பயணச்சீட்டு வரை யாவுமே
முன்பதிவு செய்தால் மட்டுமே
முன்னரே கிடைக்கிறது.

கருத்தரித்த நாளிலிருந்து
காத்துக் கிடந்தால்தான் - குழந்தை
உருத்தரித்த பின்னாவது ஆங்கிலப்
பள்ளியில் இடம் கிடைக்கிறது.

அறுத்து குழந்தையை
எடுக்கும் நாள்முதல்,
மின்மாயானத்தில் எரிப்பது வரை
முன்பதிவற்று உடனே ஏதும் சாத்தியமில்லை.

உறவறியா நண்பனின்
கணநேர உதவியும்
ஜனித்தவுடன்
தாயின் தனங்களில் சுரக்கும் தீம்பாலும்
நதியின் தண்மையும்,
இளந்தளிரின் மென்மையும்தான்
முன்பதிவற்று
இன்று உடனே கிடைக்கிறது

கவனம்!
அதையும் முன்பதிவுக்குட்படுத்த
ஏதேனும்
ஓர் இணையத்தளம் வந்தாலும் வரலாம்
                                          - முனைவர். ச. மகாதேவன் 

                         ஒளியிலே தெரிவது....



தலைவாசலுக்கு வலப்புறமுள்ள
மாடக்குழிகளில் விளக்கேற்றிப்
பல யுகங்களாயிற்று.
எண்ணெய்ப் பிசுக்கைச் சுரண்டியெடுத்து
ஓட்டை வாளி அடைத்ததும் அப்படியே!

கார்த்திகை வந்தால்
கிளியாஞ்சட்டிகள் ஒளித்துகள் உமிழும்
சுவர் விளக்குகள் வந்த பின்
திரியுமில்லை தீபமில்லை
தெருவில் ஒளியுமில்லை

டீசல் மின்தயாரிப்பு எந்திரங்கள் வந்தபின்
தெய்வத்தின் முன் தீவட்டி தூக்கிய மனிதர்கள்
தெருவுக்குப் போய் விட்டார்கள்
சப்பரத் தண்டாயத்தில்
எண்ணெய் வாளியுமில்லை
சாமி சென்ற சுவடு காட்டிடத்
துளிகளேதும் சாலையில் இல்லை.

இப்போது
இருளின் “கறு கறுப்பில்“
மின்சாரமற்ற
நடுத்தர மக்களின் தெருக்கள்

அங்கே ஒளியிலே தெரிவது
வெளிநாட்டுக்கு வேலைக்குப் போனவனின்
வீடு மட்டுந்தான்
இன்வெர்டர்கள் இருக்கும்போது
இருளைப் பற்றி என்ன கவலை?

வெளிச்சம் கூட
வேண்டியவர்களுக்கு
மட்டுமே கிடைக்கிறது
                          - முனைவர். ச. மகாதேவன் 

உயிர்த்துவம்


பின்னிரவின் பிசுபிசுத்த நிசப்தத்தைக்
கலைத்தபடி 'கிரிச்' சென்று கடந்து செல்கின்றன
சக்கரம் பொருத்திய மருத்துவமனை ஸ்ட்ரச்சர்கள்
பச்சைநிறப் போர்வைக்குள்ளிருந்து
தலைநீட்டிப் பார்க்கிறேன்.
பதின்மூன்றுநாள் ஊழலுக்கெதிராக
உண்ணா நோன்பிருந்த அம் ' மாமனிதரை '
நகர்த்திக் கொண்டு அவசர சிகிச்சைப்பிரிவு
நோக்கி ஓடினார்கள்.
கருணை மனு நிராகரிக்கப்பட்ட
மூவருக்காக எரிந்து சாம்பலான தீயாக தீபம்
செங்கொடியின் உடலைக்
கதறலோடு அள்ளிக் கொண்டு ஓடினார்கள்
            சக மனிதர்களுக்காகச்
சாகவும் துணிகிற
‘மகா ஆத்மாக்கள்’
உடனிருக்கிறவரை
உரக்கப்பேசித் தலைகோதி
அன்பு செலுத்திக்கொண்டேயிருக்கிறது
உயர்ந்து கொண்டிருக்கும் உயிர்த்துவம்
                                                       - முனைவர். ச. மகாதேவன்