. என் நினைவுச் சிறகுகளில்
நிறையவே காயங்கள் .
பறக்கும்போது
வலிக்கலாம் .
ஆனாலும்
பறத்தல் குறித்தப்
பயமில்லை .
பறத்தலின்றிப்
பறவையில்லை 


சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி 



தனங்களில் குருதியோடு
காற்று வீசித்
தாலாட்டுகிறாள்
மரமாய் மதிக்கப்படும்
மரத்தாய் .


சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி 



வெள்ளையடிப்பு நாட்களில்
ஒட்டடைக் குச்சியால்
 நூலம்படையைச் சுத்தம்
செய்தபோது நாலாபுறமும்
சிதறி ஓடிய சிலந்திகளைப்
பார்க்கும் போதெல்லாம்
மே மாதத்து
மாற்றல் உத்தரவு கண்டு
மூட்டை முடிச்சுகளுடன்
மைசூருக்கும்  நாகாலாந்துக்கும்
ஓடும் பக்கத்து வீட்டு லில்லி அப்பா
காரணமின்றி நினைவுக்கு வருகிறார்
 



இருட்டறைகள் எனக்கு இதமானவை ஒப்பனைகள் ஏதுமின்றி கற்பனைகள் அவசியமின்றி இருப்பறிய முடியா
 இருட்டறைக்குள் கழிகின்றன
என் பொழுதுகள் .
என் அசைவுகளை
 உன் இசைவின்றி நானே
இங்கு தீர்மானிக்கிறேன் .
சாளரங்கள் அற்ற இவ்வறையில் என் பெருமூச்சைக் கூட உன்னால் கேட்க  முடியாது .
பூனைக்குப் பயந்த எலியாய்
புறந்தள்ளி இருக்கும் என்னை
உன் வரவால் வாசலுக்கு இழுத்துவிடாதே
இருட்டறைகள் எனக்கு இதமானவை

ரசி



யானை லத்தியை மிதித்தாயென்றல்
காலில் முள்குத்தாதென்றாய்
மிதித்தேன்

யானை வால்முடியை வளைத்துக்
கைக்காப்புபோட்டால்
சீர்தட்டாதென்றாய்
போட்டேன்

வீட்டுவாசலில் ஆசிதர வந்துநிற்கிற
யானை முன்
வாளி நீரோடு போய்
அள்ளித் தெளித்துக் கொண்டால்
முகம் தெளிச்சியாயிருக்குமென்றாய்
செய்தேன்

ஒரு ருபாய் தந்தால் காஜமுகனின்
ஆசி கிடைக்குமென்றய்
பெற்றேன்

எப்போதாவது சொன்னாயா
யானை வந்தால்
ரசியென்று