தமிழ்த்தேன் அருந்துக


பூத்திருக்கும் மரங்களெலாம்
புவியின் புகழ்பாடக்
காத்திருக்கும்

பார்த்திருக்கும் உள்ளமெலாம்
பரவசத்தால்
வேர்த்திருக்கும்

வியர்த்திருக்கும் வான்பரப்பு
மழையாக மண்ணில்
ஈர்த்திருக்கும் வாசத்தை

கேட்டிருக்கும் குயிலோசை
மரச்சோலைதனில்
பாட்டிருக்கும் இசைக்கலைஞன்
மனம் போட்டிருக்கும்
நெஞ்சினிக்கும்
பாட்டாக
உள்ளிருக்கும் மதுத்துளியைக் கண்டு
கள்ளிருக்கும் எனக் கருதித் தும்பிக்கூட்டம்
                - முனைவர். ச. மகாதேவன் 


நாவுக்கருகே எந்திரம்

பித்தளை காபி
வட்டகைகளைக்
காகிதக்குவளைகள்
பதிலீடு செய்தன

பொத்தானை அழுத்தினால்
அளவாக நிரம்பும்
தேநீரும் குளம்பியும்
கசாயச் சுவையை விடக்
கொடுமையாயிருக்கிறது


தயவு செய்து
நாவுகளுக்கருகில்
மட்டுமாவது
இயந்திரங்கள்
வராமல் தடையுத்தரவு
வாங்குங்களேன்.
    - முனைவர். ச. மகாதேவன் 


      ஆல்பச் சிரிப்பு
நம் திருமண ஆல்பங்களைப் பார்க்கும் போதெல்லாம்
நாம் சிரமமாய் சிந்திய புன்னகை கண்டு
நமக்கே சிரிப்பு வருகிறது.
நம்மை அழகாக்க அப்புகைப்படக்கலைஞர்கள்
எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார்கள்?

தாடையில் கரம் பதிக்க வைத்துத்
தலைவியின் தோளில் சாய வைத்து,
குளிர்பானத்தை ஒரே உறிஞ்சு குழலில்
இருவரையும் பருக வைத்து,
மலை முகடுகளில், சோலைகளில் நிற்க வைத்து,
வல்லநாடு கூடத் தாண்டத நம்மைப் பலநாடுகள்
பார்த்ததாகப் பின்னணி சேர்த்து வரைகலையாக்கி
அட்டைப்படச் சிரிப்போடு
ஆல்பமாக்கித் தர எவ்வளவு பாடுபட்டிருக்கிறார்கள்?

ஆறேழு ஆண்டுகளுக்குப் பின்
குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில்
ஏற்பட்ட சண்டை முற்றிப் போய்
இரண்டு நாட்கள் பேசாமலிருந்தபோது
நாங்கள் சிரித்த பழஞ்சிரிப்புப் படப்பதிவைப்
மூத்த மகன் கொண்டு வந்து காட்டினான்
வயிறு வலிக்கச் சிரித்தோம்
எடுத்து ஆல்பமாக்க
ரஞ்சித் அப்போது அருகிலில்லை.

வாழ்வின் இனிய தருணங்களை
ஆவணப்படுத்தியதன் அவசியம்
அப்போது புலப்பட்டது.
        - முனைவர். ச. மகாதேவன்  


                              வாழ்த்துக்கள்
 


தாகுர் விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் 
ச.ராமகிருஷ்ணன் அவர்களை
"மகா பாரதி
"
  வாழ்த்துகிறது


பறிபோன பால் ஐஸ்கள்

முழுப்பரிட்சை விடுமுறை விட்ட நாளிலிருந்தே
தெருவெல்லாம் குழந்தை ஒலிகள்
ரிங்கா ரிங்கா ரோசாக்களாய்
ஒரு குடம் தண்ணி எடுத்து
ஒரு பூப் பூத்த மலர்களாய் என் நேசத்திற்குரிய குழந்தைகள்.
கயிறு கட்டி உள்ளுக்குள் ரயில் விடாத
குழந்தைகள் என்ன குழந்தைகள்?

ஜில் ஜில் விலாஸ் ஐஸ் பாக்டரியின்
சதுரப் பெட்டியின் மரக்கட்டை மூடியைச்
சப்தமாய் அடித்தபடி சைக்கிள் மணியோசையோடு
இதோ தெருவுக்குள் வந்து விட்டார் ஐஸ் மணி கிச்சா தாத்தா.

ஒரு ரூபாயோடு உள்ளிருந்து
ஓடுகிறான் என் மகன் பிரணவ்..
பாக்கெட் ஐஸோடு பழத்தை உள்ளேபோட்டுக்
கட்டையால் நைத்துத் தருகிறார்.
துளையிட்டுச் சூப்பி மகிழ்கிறான்
தம்பிக்காக அவன் தம்ளரில்
வாங்கி வைத்த பால் ஐஸ் உருகி
உள்ளுக்குள் குச்சி மட்டுமே.

ஐந்து நட்சத்திர மதிப்போடு
ஐஸ்கிரிமின் பத்து ரூபாய் பந்துகள் வந்தபின்
கிச்சா தாத்தாவோடு பாக்கெட் ஸ்களும்
பால் ஐஸ் குச்சிகளும் காணாமல் போனது

தம்பிக்காகத் தம்ளரில் ஏந்தவோ
உள்ளங்கையில் அடக்கி உச்சிவெயிலில்
ஓடவோ இயலாத
தெருக்களானது எங்கள் நெருக்கடி மிகுந்த தெருக்கள்

                          - முனைவர். ச. மகாதேவன்