அன்பின் கருவி

வெயில் வந்தால் உற்சாகமாகிவிடுவாள் பாட்டி
மகளின் வரவுக்காய்
மாவடு போட்டுக் காத்திருப்பாள்.

முந்தைய நாளே சவ்வரிசியை ஊறப்போட்டுச்
சூரிய உதயத்தி்ற்கு முன்பே கூழ் வத்தலைக்
காய்ச்சி மொட்டை மாடிக்குப் போயிருப்பாள்

தாத்தா வேட்டி தரையில் விரியும்
சுடச்சுட கூழ் வத்தலைப் பாட்டி கையால் இட்டுக்
கடைசி வரிசை முடிக்கும் போது
சூரியன்
சுள்ளென்று சுடும்.

கருப்புத் துணியைக்
கம்புமேல் கட்டி
காகத்தைத் தடை செய்வாள்.

அடுத்த நாள் விடியலிலும்
அவசரமாய் எழுந்து
வேட்டியின் மறுபுறம்
தண்ணீர் தெளித்து
வற்றலை உத்தெடுப்பாள்

வற்றல் வாணலியில் பொரியும் கணத்தில்
மகள் வந்திருப்பாள்

வெயிலைக் கூட
அன்பின் கருவியாக்கச் சாரிப்
பாட்டியால் மட்டுமே முடியும்
                      - முனைவர். ச. மகாதேவன் 


சின்ன பொம்மைகள்


                        திருச்செந்தூர்ச் சாலையோரத்தில்
போலீஸ் துரத்திவிட்டதால்
பிளாஸ்டர் ஆப் பாரீசில்
ஆளுயரப் பிள்ளையாரை அப்படியே போட்டுவிட்டு
ஓடிய ராஜஸ்தான் மாநிலபொம்மைக்
கலைஞன்...
அடி விழுந்தால் அப்புறப்படுத்த முடியா
ஆளுயரப் பொம்மைகளை அன்றிலிருந்து
செய்வதே இல்லை.

அடித்து விரட்டினாலும்
ஆளுக்கொன்றாய் தூக்கிக் கொண்டு
ஓடத் தோதாயிருக்குமெனக்
குட்டிப் பொம்மைகளையே செய்துவிட்டு
விற்குமென வெகுநாட்களாய் காத்திருக்கிறான்.
நாம் பேசாமல் வேடிக்கை பார்த்தபடியே
வழக்கம் போல்
வண்டியில் பலநூறுமுறைக் கடந்து செல்கிறோம்.

                              - முனைவர். ச. மகாதேவன்

   விபூதிப் பாட்டி

கரிப்பிடித்த அரிக்கேன் விளக்குச் சிமினிக்குள்
விபூதியைப் போட்டு விரலால்
பளிச் சென்றாக்குவாள் காமாட்சிப்பாட்டி
மறுநாள் காலை அழகுநாச்சியம்மன்
பெயரைச் சொல்லி தையே நெற்றியில் பூசிக்கொள்வாள்.

எதுவோ கடித்து விட்டதெனத் தடிப்பைக் காட்டினால்
அவ்விடத்தில் விபூதியை அள்ளிப் போட்டுக்
கரகரவெனத் தேய்ப்பாள்

வரலெட்சுமி விரதத்திற்கு முந்தைய நாள்
கறுப்படித்த வெள்ளி அம்மன் முகத்தை
விபூதியால் வெள்ளை வெளேறென்றாக்கிடுவாள்.

பாட்டி! அசதியாயிருக்கிறதெனச் சொன்னால்
அன்பாய் தலைமுடி கோதி
விபூதி எடுத்து மந்திரித்து
ஐந்தாறு முறை கொட்டாவி விட்டுத்
தலையைச் சுற்றிக் கண்ணேறு கழிந்ததெனத்
தலைவாசலில் நின்று ஊதிவிடுவாள்.

நள்ளிரவு நேரம்
தொட்டிலில் தூங்கும் விஷால் அலறியழுதால்
வாரிச் சுருட்டி எழுந்து
சுடலையோட்டமெனச் சொல்லி
அவன் நெற்றியில் விபூதியிட்டுத்
தோளில் தட்டி உறங்க வைப்பாள்

தசரா வந்தால்
கண்ணாடிப் படங்களைக் கழற்றி
விபூதியால் பளிச்சென்றாக்குவாள்.

ஒற்றைப் பொருளால் ஊர்ப்பட்ட வேலை
செய்யத் தெரிந்த என் பாட்டி தந்த
விபூதி மட்டுமே இப்போது கொட்டானில் உள்ளது
பாவம்... கடந்த மாதம் வெள்ளக்கோயில்
சுடுகாட்டில் அவள் விபூதியாகித் தாமிரபரணியில்
கலந்து போனாள்.
              - முனைவர். ச. மகாதேவன்

           ஆலய மணிநா...


செந்தூர் கோவில் பூசை மணியோசையைக்
கேட்டபின்தான் வீரபாண்டிய கட்டபொம்மன்
மதிய உணவருந்தச் செல்வானாம்.

சவேரியார் கோவில் ஆலயமணி
விட்டு விட்டு ஒலித்தால்
சவவண்டி வந்துவிடுமென
பயந்து ஓடிய பள்ளி நாட்கள் இன்னும் நினைவில் உண்டு

பூசை நேரத்தில் ஒற்றை விசையில்
இயங்கும் மின்சார மேளதாள
மணிபொலியையும் கேட்கிறேன்.

இப்போது என் நினைவெல்லாம்
நா அறுந்து போனதால்
ஆண்டி நாடார் கடைக்கு
விற்கப்பட்டு உருக்க
உள்ளுக்குள் எடுத்துச் செல்லப்பட்ட
எங்கள் பரம்பரைக் கோவிலின்
தொன்மையான
ஆலய மணியைப் பற்றிதான்.

நினைத்துப் பார்க்கிற யாவுமே
உயிரின் வேரை
நனைத்துப் பார்க்கத்தானே செய்யும்

                  - முனைவர். ச. மகாதேவன்


                                   வாழ்த்துக்கள்
 

உயிர்மைப் பதிப்பகத்தின்
சுஜாதா விருதுப் பெற்ற
அழகியல் எழுத்தாளர் கலைமாமணி
திரு.வண்ணதாசன் அவர்களை
"மகா பாரதி"
  வாழ்த்துகிறது