குழந்தைகள் தினம்

நேயத்திற்குரிய எங்கள் நேருபிரானே!

குழந்தைகளைக் கண்டால் மனம் குமுறுகிறது...

எதற்காக?

புத்தகச் சுமைகள் தூக்கியே குழந்தைகளின்

முதுகெலும்புகள் வளைந்து போனதற்காகவா?

சின்னத்தளிர்கள் சின்னாபின்னப்படுத்தப்பட்டதே!

அதற்காகவா?

மரப்பாச்சிப் பொம்மைகளோடு

மச்சுப்படியில் விளையாடிய குழந்தைகயர்

பொம்மைத் துப்பாக்கியேந்திப்

பெற்றோரைச் சுடுகின்றனரே அதற்காகவா?

அவர்களின்

சின்ன மூளைக்குள்ளே தொலைக்காட்சியின்

நச்சுவிதை தூவப்படுகிறதே அதற்காகவா?

அவர்களின்

குழந்தைத் தனங்கள்

குறிவைத்துத் தாக்கப்படுகிறதே அதற்காகவா?

நேருபிரானே!

குழந்தைகளின் நிலை கண்டால்

நீ நெஞ்சில் சூடிய

ரோஜாக்களிலிருந்தும் குருதி வடிகிறது

துடைப்பதற்குத் துடித்தபடி வருகிறேன்.

ஓடி விளையாடிய பாப்பாக்களை இன்று

தேடி விளையாடச் சொன்னாலும்

மறுத்து ஓடுகிறார்கள்

தனிப்பயிற்சி வகுப்பிற்கு நேரமாகிவிட்டதாம்!

குழந்தைகளைக் கொண்டாடச் சொன்னாய்

நீ...! பார் அவர்களைக்

கொன்று அந்த அரக்கர்கள் ஆடுவதை!

திண்டாடுவது

என் இளைய நம்பிக்கைகள் அல்லவா?

                - முனைவர். ச. மகாதேவன்