--மிட்டாய்கள்-- 
பள்ளி நாட்களில் 
பல்லை உடைத்த 
கல்கோனா மிட்டாய்கள்

அந்தோனியார் பள்ளியில் 
அஞ்சாப்புப் படிக்கையில்
அந்தோனி தந்த சூடன் மிட்டாய்கள்

கதிட்ரல் பள்ளி வாசலில்
தேன் உள்ளதென்று 
வாங்கித் தின்ற தேன் மிட்டாய்கள்

பத்தாப்பு தேர்வு எழுத 
சேவியர் பள்ளிக்குப் போன போது  
வாங்கித் தின்ற ஜீவஜோதி   மிட்டாய்கள்

தசரா இரவில் 
பாளை சவகர் மைதானத்தில்
சப்பரம் பார்க்க போன போது\
ஆச்சி வாங்கித் தந்த தேங்காய் மிட்டாய்கள்

பதினெட்டாம் பெருக்கன்று
பேராச்சி அம்மன் கோவில் வாசலில்
வாங்கித் தின்ற சவ் மிட்டாய்கள்

இன்று
தின்றவனின் 
மண்டை சிதறுவதாய் காட்டப்படும் 
மண்ணாங்கட்டி மிட்டாய்களைக்  
கண்டால் பற்றி எரிகிறது