பத்திரமாய்

நகரப் பேருந்து நெரிசலில்
நடத்துநர் தந்த நாலுரூபா பயணச்சீட்டை
வியர்வை சிந்தும் விரலிடுக்கில்
பத்திரமாய் பாதுகாப்பதைப் போலப்
பலநேரங்களில்
கவனமாயிருக்க வேண்டியிருக்கிறது

பிடிக்காத அலைவரிசையைப்

பிடிவாதமாய் நகர்த்துகிற
ரிமோட்களைப் போலப்
பிடிக்காத மனிதர்களிடமிருந்து
பிடிவாதமாய்
நகரத்தான் வேண்டியிருக்கிறது

கண்ணாடித் தொட்டியின்

செவ்வகப் பரப்புகளில்
அர்த்தம்தெரியாமல்
முட்டி மோதி அலைகிற
அலங்கார மீங்களைப்போல
அர்த்தம் பிடிபடும்வரை

எதற்கும் காத்திருக்கத்தான்

வேண்டியிருக்கிறது
அது அது அது அதன்
உட்பொருளை
உணர்த்தும் வரை!!!!!!!

                                  
                               
                 -முனைவர் ச.மகாதேவன்