அந்த நாட்கள்



பனையோலைப் பெட்டியில்
கொச்சக் கயிறு பிடித்துத்
துக்கிப் போன
உடன்குடிக் கருப்பட்டிச் சிப்பங்கள் - இன்று
வண்ணார்ப்பேட்டைப் பேரங்காடியின்
அச்சடித்த பிளாஸ்டிக்  பைக்குள்
நியான் விளக்கு ஒளிவெள்ளத்தில்..



சாத்தூர்க் கடைத் தெருவில்
செட்டியார் கடை மண்பானைக்
குளிர்ச்சியில் சிரட்டை அகப்பையோடு
மிதந்த எண்ணெய் - இன்று
பாலிதீன் பாதுகாப்பில்
இலவச எள் பாக்கெட்டோடு

வீராபுரத்து வில்வண்டிகளில்

கம்பித் தடுப்பில்
கைகளை வைத்தபடி
சாலைகளை மெதுவாய்
ரசித்த குழந்தைகள் - இன்று
ஆட்டோ நசுங்கல்களில்
அடைபட்டு விரைகின்றன

 

இருப்பதை விட
இழந்தது
இனிக்கிறது
 

             -Dr.S. மகாதேவன்