1997 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ. கமல்ஹாசன் அவர்கள் நடத்திய கட்டுரைப் போட்டியில்மாநில அளவில் முதலிடம் பெற்ற கட்டுரை
”மெல்லத் தமிழ் இனி...
பாசத்திற்குரிய பாரதிக்கு,
தமிளில் பெயிலாகிப் போன தமிளுவேந்தன் எழுதுவது. நீ நளமா? நான் நளமா இல்லை! உன் மேல் என்றைக்குமே எங்களுக்குத் தீரா வெறியுண்டு. மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்று, பேதைக்குரலில் பெரிதாகச் சொன்னாயே… உன் வார்த்தைகளுக்கு நாங்கள் வாழ்க்கைக் கொடுத்துவிட்டோம்.
சந்தக் கவியெடுத்து, செந்தமிழை அதில் குழைத்து மந்தத் தமிழினனத்தை மந்திரிக்க வந்த தமிழ், இன்று சீழ்பிடித்து, அயல் மொழியின் கால்பிடித்து மயானத்தை நோக்கி மாட்டு வண்டியில் போய்கொண்டிருக்கிறது! கவிஞர் பட்டங்களோ இன்றைக்குக் காசுக்குக் கிடைக்கின்றன, முனைவர் பட்டங்களோ மூர் மார்க்கெட்டில் விற்கின்றன. கடைகளில் சிலேபி விற்கும் அளவுக்குகூடச் சிலப்பதிகாரம் விற்க மறுக்கிறது.
அதோ பார், பாரதி! ஓடம் முழுக்க ஓட்டைகளோடு, காலங்கையின் கடைசிப் பயணயாய் நம் தமிழ், காரணம்... உம் நேசமிகு நெட்டை நெடுமரங்கள்...
தேன் தமிழில் பேசினால் ஏன் தமிழில் பேசினாயென்று சண்டைக்கு வரும் கூட்டம் ஒருபுறம், துவிச்சக்கரவண்டியேறித் தொல்காப்பியத் தோட்டத்தில் தொடரோட்டம் நடத்துச் சொல்லும் கூட்டம் மறுபுறம். இடையில் ஊமை நாடகத்தின் உலவும் பாத்திரமாய் உன் உன்னதத் தமிழன்னை.
தமிழ்ப்பள்ளிகளில் தலைநிமிர்ந்து நிற்பதை விட, கான்வெண்டுகளில் கம்பி எண்ணுவதைத்தான் கவுரமாய் நினைப்பவர்கள் நாம் என்பதாலோ என்னவோ, ”அய்யா” என்ற அழைப்புக் கூட அவமதிப்பாக அங்கீகரிக்கப்பட்டு விட்டது.
நெஞ்சு பொறுக்குதிலையே
பப்பாளிப் பாலெடுத்துப் பால்கோவா கிண்டச் சொல்லி ஸ்டார் டி.வி. யில் அந்நியர் யாராவது ஆங்கிலத்தில் சொன்னால், உண்டு பார்த்துவிட்டு, உன்னதச் சுவையென்று தலையை ஆட்டும்போது நம் சுயங்கள், மலடாகிப் போனதை மறுக்க முடியாது.
சான்பிரான்சிஸ்கோவிலிருந்து சாணியை இறக்குமதி செய்து வந்து, சந்தன மணம் அதில் சார்ந்திருப்பதாய்ச் சாதிக்கும் இவர்களுக்குத் தாய்மொழி என்பது தரங்குறைந்த ஒன்றுதான்.
ஒன்றைரை வரிகளில் உலகளந்த திருக்குறளும், சிந்தனை தரும் சிலம்பும், மேலான மதிப்பீடுகள் தந்த மேகலையும், சீவகனார் வளம்பாடும் சிந்தாமணியும், சங்க இலக்கியத்தின் பத்து எட்டொடு குண்டலகேசியும் சொல்லாததையா வேறு உலகஇலக்கியங்கள் விளக்கி விடப் போகின்றன? மற்ற துறைகளை வாழ்க்கைக்குப் படிக்கிறோம் என்றால் தமிழில் வாழ்க்கையைப் படிக்கிறோம்.
ஒவ்வொருவரும் தங்கள் கடிகாரம் காட்டும் நேரமே சரியென்று சாதிப்பதைப்போல அந்தந்த மொழியினர், தத்தம் தாய் மொழியை முன்னிறுத்திப் பிடிப்பது வழக்கம்; நம் தமிழைத் தவிர! தாய் மொழியினால் மட்டுந்தான் எவராலுமே சிந்திக்க முடியும். தாகூரின் கீதாஞ்சலி நோபல் பரிசு பெற்றதென்றால், அவரின் “சிந்திப்பு மூலம்” வங்கமொழி! எழுத்தாளர் தோப்பில் மும்மது மீரான் தன் நாவல்களைத் தனக்கு நன்கு பரிச்சயமான மலையாளத்தில் சிந்தித்து, பின் அதைத் தமிழ்ப்படுத்துகின்றாராம்.
ஆனால் நம் கல்வி முறையில் நடப்பதென்ன? எல்.கே.ஜி. முதல் எம்.பி.பி.எஸ். வரை தமிழின் “அ“ கரத்தைக்கூட அறியாமலே தமிழ்நாட்டில் பட்டம் வாங்கி விட முடிகிறது. ஒன்றுமே புரியாத பிஞ்சு வயதில் “நர்சரி நரகங்களில்“ அவர்களை நட்டு ஆங்கிலஅமிலத்தை அள்ளி ஊற்றும்போது கல்வி கற்பதே அதற்குக் கசப்பாகப் பதிந்து விடுகிறது.
இனி பொறுப்பதில்லை
திருமண வீட்டில் உணவு உண்ணப் பந்தியில் அமரும்போது, சாதம், சாம்பார், ரசம், பாயசம், மோர் எனத் தனியே முறையாக உண்ணும் நாம், மொழியில் மட்டும் கூட்டாஞ் சோறுகளையே கூடுமானவரை கலக்கிறோம் என்பது கண்களில் கந்தக அமிலத்தை ஊற்றுவதை விடக் கொடுமையான செய்தி.
Pass பண்ணி Study பண்ணி Start பண்ணி, எனத் தமிழைப் பேசிக் கொண்டிருக்கும் போது தமிழ் வாழவா செய்யும்? தான் இறந்தபின் தன் கல்லறையில், ”இங்கே தமிழ் மாணவன் உறங்குகிறான்” என்று எழுதுங்கள், என்று அயல்நாட்டுப் பாதிரியார் ஜீ.யூ.போப்பையர் மதி்த்த தமிழுக்கு, தெவசம் வைக்க இன்று தேதி குறிக்கிறோம். தமிழில் பெயர் வைத்தாலும் ஆங்கிலத்தில் தலையெழுத்துக்கள், ஓர் ஆங்கில நூலில் ச. MAHADEVAN என எழுதினால், தோலை உரித்து அவர்கள் தோல் பை செய்து விடுவார்கள். ஆனால் நாம்?
”பொந்தி சேரி – பாண்டிச்சேரி எனும் பெயர் அடிமையின் அடையாளம், எனவே புதுச்சேரி ஆக்குவோம் என மாற்றி நான்கு வருடமானபின்தான் தமிழ்நாடு MADRAS, சென்னையாக மாறுகிறது. அரசு ஆணை பிறப்பித்த பின்னும் விமான நிலையங்களில் இன்னமும் ’மெட்ராஸ்’ என அழைக்க முடிகிறதென்றால் தமிழ் இனி வாழவா செய்யும்?
ALL INDIA RADIOவை அகில இந்திய வானொலியாக்கி விட்டோம் என ஒரு கூட்டம் சப்தம் போடும் அதே நேரம் டெல்லி தமிழ்ச் செய்தியறிக்கையில் ”ஆஷாஷ்வாணி… செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண் சுவாமி” என ஒலிக்கும்போது தமிழுக்கு, வாழும் வாய்ப்பு உண்டா என்ன?
இலக்கிய இடறல்கள்
கேரளாவில் போய் “உங்கள் ஒப்பற்ற எழுத்தாளர் யார்?” என்றால் எந்தவித எதிர்க் கருத்துமின்றி எம்.டி. வாசுதேவன் நாயரையோ, பிறரையோ சொல்வார்கள். ஆனால் தமிழகத்தில்? ஊருக்கு ஒருவரைச் சொல்லி, கடைசியில் எவருமே இல்லை என்பார்கள். கோடிப் படைப்பாளிகளுக்குள் பல்லாயிரம் பிரிவினைகள். விளைவு இலக்கியம் இடறலில்.
கரன்ஸிக்காரர்களின் வியர்வைக்கு வெண்பா எழுவதும், ஹார்லிக்ஸை சோளநக்கியாக்கி, குளுக்கோஸைப் பருச்சருக்கரையாக மொழிமாற்றம் செய்யவும், முக்கல் முனகல்களின் இசைப்பள்ளங்களில் வார்த்தையை அள்ளிப் போட்டு நிரப்பும் ஆபாச வாகனமாயும் தமிழை மாற்றியபின் ’இலக்கியத்தமிழ்’ வாழவா செய்யும்?
இதயத்துடிப்பு நின்றுபோன இசைத்தமிழ்
மாசில் வீணை வைத்து, மாலை மதியமும் பூண்டு, தேவாரப் பண்ணென்றும், தெவிட்டா நல்பாட்டென்றும், பூவாரமணம் பெற்ற புனிதஇசைத்தமிழ், இதயம் கிழிபட்டு இரணமாகிக் கிடக்கிறது. ”தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்” என்று அப்பரால் சப்பரத்தில் ஏற்றப்பட்ட சந்தத்தமிழ் சலுகைப் பருக்கைகளுக்காக இன்றைக்கு மொழிக்கலப்பில் மாட்டிக்கொண்டிருக்கிறது.
இசையுலகின் மும்மூர்த்திகளான முத்துசாமி தீட்சிதரும், சியாமா சாஸ்திரியும், தியாகப்பிரம்மமுமான மூவருமே தமிழகத்தில் உதித்தவர்கள்தான். ஆந்திர விசயவாடாவின் சபாக்களில் போய் அமர்ந்து 24 மணி நேரமும் தமிழிசை பாடினால் சும்மா விடுவார்களா? நாட்டுப்புறத் தமிழிசையை மறந்த சமுதாயத்தி்ன் முன் மெல்லத் தமிழ் துளிர்த்து விட முடியுமா?
நலிந்து கொண்டிருக்கும் நாடகத் தமிழ்
நாடகத்துக்கே இலக்கணம் வகுத்து, சிலப்பதிகாரம் பேசிய சீர்மிகுகாலம் மாறி, காரை பெயர்ந்த கட்டிடமாய், வேரை இழந்த விருட்சமாய் தமிழ் நாடகங்கள் அழிவை நோக்கி அடியெடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றன.
“How are you Bala? I am fine ya!” You became mad Ya... why? Because you are my friend. இது மிகப்பிரபலமான தமிழ் நாடக கர்த்தாவின் தமிழ் நாடகத் தொடக்கம்... நிச்சயம் தமிழ் வாழும் தானே!
மனதில் உறுதி வேண்டும்...!
ஓடு ஒழுகுவதைக் காரணம் காட்டி, வீட்டை விற்றுவிட்டுப் போய் விட முடியாது. க்யூ வரிசையிலும், கேட்டுவாசலிலும், நடு சென்டரிலும் ”தமிங்கிலிஷ்,” படித்த நம் மனப்பான்மை மாற வேண்டும். ”சுத்தத் தமிழைப் பேசுங்கள்!” என்று சொல்ல வரவில்லை. பேசும் தமிழைச் சுத்தமாகப் பேசுவோம் என்பதே என் அழைப்பு.
தமிழ் என்றாலேயே கோவலன், கண்ணகி என்று பதிக்கப்பட்ட மதிப்பீடுகளை உடைத்தெறிய வேண்டும். எந்தத் துறைக்குமே சளைக்காத வகையில் தமிழும் நவீனத்தோடு கைக்கோர்த்து ஆண்டுகள் பலவாகி விட்டன. அதையெல்லாம் தமிழறிஞர் ஏற்றுக்கொண்டு பிறருக்கும் அறிவித்தாக வேண்டும். அதற்கு விவாதங்களை முன்நிறுத்த வேண்டியது அவசியம்.
தூய வெண்துணியில் எந்த நிறத்தை ஏற்றினாலும், அது அதுவாகவே மாறிவிடும். ”இணையம்” வந்துவிட்ட நேரத்திலும் இலக்கணக் குறிப்புகளைப் பற்றியே ஆய்வுகள் நடந்து கொண்டிருந்தால், காலப்பேருந்து நம் காலில் ஏறிவிடும். தன் பிள்ளை என்பதற்காகக் காலக்முழுக்கக் கக்கத்திலேயே தூக்கித் திரிந்தால் வளர்ச்சி என்பது வரப்போவதில்லை.
சீக்குப்பிடித்த சிந்தனையை விட்டு விட்டுப், புதுமையைச் சிநேகத்தோடு வரவேற்போம். லேசரில் அச்சடிப்பதால், கம்பராமாயணமொன்றும் களங்கமாகி விடப் போவதில்லை. முதலில் நம் தாய்மொழியை நாம் மதிப்போம். பின் உலகம் நம்மை மதிக்கும். அப்போது மெல்லத் தமிழினி வாழும் அந்த மேற்குமொழிகள் தனி புவிமிசை மாளும் ”பாரதி! உழவாரம் தூக்கிய அப்பர் மாதிரி, உறுதியைத் தூக்கிப் புறப்படுகிறோம்.
காரணம்... உன்னைப் போல நானும், தாமிரபரணியின் தண்ணீர் குடிப்பவன்.
எனது முதல் குறி அவன்தான்... அதோ பார்...
அவன் பாடுவதை,
”தீராத விளையாட்டுப் பில்லை... கண்ணன்.
தெருவிளே பெண்களுக்கோயாத தொள்ளை”
”இந்தியன்” தாத்தாவாக எழுகிறோம்... தமிழின் தலைகுனிவு நீக்க!
என்றும் அன்புடன்
தமிழ் வேந்தனாக
சவுந்தர மகாதேவன்,
பாளையங்கோட்டை.