அரைத்த சூடு தீரச்
செய்தித்தாளில்
ஆறப்போடுகிற
ரைஸ் மில்காரனாய்
நமை அரைத்துச்
சில நேரம்
ஆறப்போடுகிறது
வாழ்க்கை எனும்
 வட்ட எந்திரம் .


சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி 



. மொட்டை மாடிக் கவளச் சோறு
வேனிற்கால மண்பானை நீர்
முருகன் தியேட்டர் கல் முறுக்கு
ஆனித்தேர் வடம்
பதினெட்டாம் பெருக்கு நதி
தசரா காளி வேடம்
ஜீவ ஜோதி மிட்டாய்
வாழைப் பழம் போட்டு
அடித்துத் தந்த பாக்கெட் ஐஸ்
கை விட்டுப் பரந்த
 சி .பி .வாடகை சைக்கிள்
கலர்க் கோழிக் குஞ்சு
இப்படிப்பட்ட பட்டியலில்
 இன்னமும் உண்டு சொல்லாத பலவும்
இறுகிய கான்க்ரீட்டாய்
இதயம் மாறிய பின்
இளக்கம் பற்றி
என்ன கவிதை வேண்டிஇருக்கிறது ?


சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி 



கருவேல மரங்களே
காகிதமாகும் போது
நாம்
கவிதையாக முடியாதா ?


      சௌந்தர மகாதேவன் 


அதிகாலை வேளைகளில்  தூக்கி எறியப்படும் பால் பாக்கெட்களைப்போல் தூக்கி எறிகிறோம் தூய உறவுகளை .


சௌந்தர மகாதேவன் 



இருக்கும் போது
எருக்கம் பூ கூடத்
தராதவர்கள்
மரித்தபின்
மலர் வளையம்
வைக்க
வருகிறார்கள்

சௌந்தர மகாதேவன்