எழுதுகிறேன்

விபத்தில் சிக்கி யார் உயிருக்குப் போராடினாலும்
தன்னுயிர் குறித்துக் கவலைப்படாமல்
கடிது விரைகிறார் காப்புந்து ஒட்டுநர்

பெயர் தெரியாப் பெண்ணின்
பிரசவ அறுவைக்கும் ரத்தம் தர
ஓடுகிறான் உடன் பிறவாச் சோதரன்

தான் செத்த பிறகு
கண்களை எடுத்துக்கொள்ள
அனுமதிக்கடிதம் தருகிறார்
செவல்குளம் சுப்பராயதாத்தா

இறந்தபின் எரியூட்ட வேண்டாமென
தன்னுடலைத் திருநெல்வேலி
மருத்துவக் கல்லூரிக்கு எழுதிவைக்கிறார்
பாலம்கல்யாண சுந்தரம் அய்யா

அவர்கள் செய்கிற யாவற்றையும்
சிலாகித்துக் கவிதை
எழுதிக் கொண்டிருக்கிறேன் நான்
                                          - முனைவர். ச. மகாதேவன்  www.mahatamil.com

 போலித்தனம்

சவத்தைச் சுற்றி ராப்பிணம் காத்து
கதறியழுகிற முகங்களில் போலித்தனம்
கோரப் பற்களாய் முன் துருத்தி நிற்கிறது

மனிதர்கள் வர வர நினைவு நாடாக்களை
நீட்டி இழுத்து இறப்பிற்கு முந்தைய நிமிடங்களை
மறுபடியும் மறுபடியும் விளக்குகிறான் அவன்
சோகமாய் முகம் வைத்துச் சொல்வதைக் கேட்கிறார்கள் அவ்வப்போது வருகிறவர்கள்.

நேற்றுவரைக் கட்டிப் புரண்டுச் சண்டையிட்டவனும்
ரோஜா மாலையோடு வந்தழுது
இன்னா செய்யா இனியவனாய் தன்னைத்
தரமுயர்த்த முயற்சிக்கிறான்

எதையும் விளங்கிக் கொள்ள
இயலா இயலாமையோடு
நீர் மாலை ஏற்கத் தயாராய்
இன்னும் விரைப்பைக் கூட்டுகிறது சவம்

பிணக் குறிப்பறியாப்
பிள்ளைகளானோம் நாம்
                       - முனைவர். ச. மகாதேவன்  www.mahatamil.com 

             சொல் வனம்

யாரோ வீசிய விதைகளிலிருந்து
சொற்செடிகள் அடர்த்தியாய்
முளைத்துக் கிடக்கின்றன
சில இனிப்பாய் சில கசப்பாய்
சுவையுணராச் சுதந்திரத்தோடு இன்னும் சில

சொற்களால் வளர்ந்தவர்கள்கூட
இப்போது அந்தச் சொற்களைக் கண்டுகொள்வதில்லை
சொல்வனத்தில் சொக்கவைக்கும் இலைகளுண்டு
பேச்சுமயக்கத்தில் அவ்வப்போது மூர்ச்சையாவோரைத்  
தெளியவைக்கும் சர்வரோக நிவாரண சஞ்சீவிகளும்   உண்டு

அவ்வனத்தின் சில சொற்கள்விற்கள்
குத்தினால் குருதி கொட்டும்
சில சொற்கள் விஷ முட்கள், குத்தினால் புரையோடும்

பாராட்டு விழாக்கள் நடத்த அவ்வனத்தில்
பரந்த வெளியுண்டுபிடிக்காமல் போய்விட்டால்
அவரோடு சமராட அமர்களமும் அங்குண்டு

அவ்வனத்தை யாரும் பட்டாப் போட முடியாது
சொற்கள் யாவும் சொந்தம் யாவருக்கும்
எனவே என் சொல்லென்று எவரும்
சொல்ல இயலா அளவுக்குச் சுதந்திரமாய்
பரந்து கிடக்கிறது சொல் அதிகாரம் செய்யும்
அச்சுந்தர வனம்
ஆதலால்
எவரும் நீரூற்ற அவசியமற்று
நீண்டு வளர்கின்றன
அந்தச்சொல்வனச்செடிகள்
                             - முனைவர். ச. மகாதேவன்  www.mahatamil.com