பழமொழி
மக்கென்று பரிகசித்தாய்
கற்கத் துணிந்தேன்
மெத்தப் படித்த திமிரென்றாய்
மெல்ல அழுததோடு
அமைதி காத்தேன்
அமைதியும் ஒரு வகை
அகம் பாவம் தானென்றாய்
ஊமையாய் உலவினேன்
பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்’, என்று
பழமொழி கொண்டு
பலமாகத் தாக்கினாய்
நீ குற்றம் சொல்வதிலேயே
குறியாயிருப்பவன் என்பதால்
இப்போதெல்லாம்
சுகமென்றிருக்கிறேன்
மூளையைக் கூர்தீட்டி
அதற்கொரு பழமொழியை
இதற்குள் தேடியிருப்பாயே!
சொல்லித் தொலை
என்ன செய்ய?
கேட்டுத் தொலைக்கிறேன்.
- முனைவர். ச. மகாதேவன்
Saturday, March 5, 2011
comments (0)
சொல்லாமலே
படியில் அமர்ந்தால்
தரித்திரம் வருமென்றாய்
தலைக்கு மேல்
தனமிருந்தாலும்
தலையணை மீதமராதென்றாய்
அரிசி தின்றால்
மண நாளன்று
மழை கொட்டுமென்றாய்
கிளம்பும் போது
நிலையில்
தலை தட்டினால்
செம்புத் தண்ணீரருந்தி
ஒருவிநாடி
அமர்ந்து செல்லென்றாய்
வரைபடத்தை
வானிலை அறிக்கை
வாசிக்கிற அந்த
வானிலை நிலைய
அதிகாரியைப்போல. . .
வரலாம்
வராமலும் போகலாம்
எதுவும்
நடக்கலாம்
நடக்காமலும் போகலாம்
என்ற உண்மையை மட்டும்
ஏனெனக்குச்
சொல்லாமலேயே
வளர்த்தாய் அம்மா?
- முனைவர். ச. மகாதேவன்
லஞ்சம் தவிர் !
லஞ்சத்தில் தஞ்சமடை
யாவருக்கும் விலை வை
எதிர்த்தால்
எதிலாவது சிக்க வை
நோட்டுக்களை நீட்டு
பணத்தாசை காட்டு
சத்தியம்
சத்தமற்றுச் சாகட்டும்
வாயால் மெய்யை வெல்
ஆகவே
என்றெல்லாம் எனக்குச் சொன்னார்கள்
இப்போது ஒன்றே ஒன்று மட்டும்தான்
என்னால் சொல்ல முடியும்
நீயேனும்
லஞ்சம் தவிர்!
- முனைவர். ச. மகாதேவன்








