பதிவு செய்து வைத்த
இசை ஒலிக்கிறது...
இருபது பேர் சுற்றிச் சுற்றி வருகிறோம்
நாற்காலிகள்
நான்கு மட்டுமே.

கால்கள் விலகி விலகி நடந்தாலும்
கண்கள் இசைக்கருவியை இயக்குபவனையே
கவனமாகப் பார்த்து
மீள்கின்றன
யாரும் எதிர்பாராத நிமிடத்தில்
இசையை அவன் நிறுத்துவதும்
மீண்டும் ஒலிக்க வைப்பதும்
தொடர்கிறது...

ஒரு வினாடி...
இருப்பை மறந்து
இசையில் திளைக்கிறேன்
நாற்காலி ஒன்றும் காலியில்லை...
வெளியேற்றப்படுகிறேன்.

இசையில் இலயிப்பவனால்
நிறுத்தலைப் புரியமுடியாது

நாற்காலிகளில் மட்டுமே
கவனமாயிருப்பவனுக்குக்
காதுகள் இருப்பதற்கான
சாத்தியம் ஏதுமில்லை...

இசைத்தலும் ரசித்தலும்
நாற்காலியைச் சுற்றி
நாற்காலியைப் பற்ற
ஓடுகிறவனுக்கு
இருத்தலுக்கான நியாயமில்லை.

எனவே ஓடாதிருத்தலை மட்டுமே
இனி நான் செய்ய முடியும்



பியூசான குழல் விளக்கிற்கு
ஒருபடி உப்புத் தந்து
சைக்கிளில் உப்பு வியாபாரம்
செய்துவந்த சந்தைப் பேட்டை 
ராசையாவின் பிழைப்பிலும்
பன்னாட்டு உப்பு நிறுவனங்களின்
அயோடின் அலறல் அறிக்கை
மண்ணை அள்ளிப் போட்டது

கீரை விற்கவாவது போகலாமென்று
போனால்
பேரங்காடிகள் அவன் பிழைப்பில்
மண்ணள்ளிப் போட்டான.
பேரங்காடிக் சுவர்களில்
கணினி விலைக் குறியீட்டுடன்தான்
இனி
கீரைகள் விற்கப்பட வேண்டுமாம்.

இவர்கள் புகாத
தொழில் இருந்தால்
சொல்லுங்கள்
அவன்
பட்டினியில் சாவதற்குள்

விரைகின்றன விரல்கள்...

குண்டு குண்டாய்
லட்டு லட்டாய்
கண்ணில் ஒத்திக் கொள்ளும் படியான 
எழுத்துக்கள்
மனிதர்களின் காலச்சுவடுகள்

தலைப் பொங்கலுக்குத்
தங்கச்சிக்குச் சீர்தர வேண்டி
ஆண்டி நாடார் பாத்திரக்கடையில் எடுத்த 
பித்தளைப் பானையில்
அவளது பெயரைக் கை வெட்டில்
முத்து முத்தாய் எழுதித் தந்த
லோகு அண்ணாச்சியின்
கையழகை அதன் பின்
பல பாத்திரங்களில் எந்திரத்தால்
வெட்டப்பட்ட எழுத்துக்களில் ஏன் இல்லை?

சமாதானபுரச் சிற்பக் கலைக் கூடத்தில்
கைவெட்டால் கல்லெழுத்து எழுதிய அழகை
இன்று
கிரானைட் பலகையின் மீது 
இறந்த மனிதரின் படத்துடன்
தரும் கணினித் தொழில் நுட்பத்தால்
ஏன் தர முடியவில்லை?

மின்னஞ்சலும், குறுஞ்செய்திகளும்
எழுத்தின் கழுத்தை
என்றைக்கோ
திருகிப் போட்டுவிட்டன
இப்போது
கோபாலசாமி கோவிலுக்குள் போனால்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட
கல்வெட்டுக்களைத் தேடி விரைகின்றன
என் விரல்கள்.

                       ஆலய மணிநா...


செந்தூர் கோவில் பூசை மணியோசையைக்
கேட்டபின்தான் வீரபாண்டிய கட்டபொம்மன்
மதிய உணவருந்தச் செல்வானாம்.

சவேரியார் கோவில் ஆலயமணி
விட்டு விட்டு ஒலித்தால்
சவவண்டி வந்துவிடுமென
பயந்து ஓடிய பள்ளி நாட்கள் இன்னும் நினைவில் உண்டு

பூசை நேரத்தில் ஒற்றை விசையில்
இயங்கும் மின்சார மேளதாள
மணிபொலியையும் கேட்கிறேன்.

இப்போது என் நினைவெல்லாம்
நா அறுந்து போனதால்
ஆண்டி நாடார் கடைக்கு
விற்கப்பட்டு உருக்க
உள்ளுக்குள் எடுத்துச் செல்லப்பட்ட
எங்கள் பரம்பரைக் கோவிலின்
தொன்மையான
ஆலய மணியைப் பற்றிதான்.

நினைத்துப் பார்க்கிற யாவுமே
உயிரின் வேரை
நனைத்துப் பார்க்கத்தானே செய்யும்

                  - முனைவர். ச. மகாதேவன்