ஒரு ரூபாய் கோழிக்குஞ்சு

பாளையங்கோட்டை
சேவியர் பள்ளி வாசலில்
ஆறாப்பு முழு ஆண்டுத் தேர்வு
முடித்த மகிழ்ச்சியில் நின்றிருந்தபோது
அட்டை அரணில்
கீச்... கீச்... சத்தத்தோடு ஒன்றன்மீது ஒன்றாய்
அங்குமிங்கும் அலைந்த
கலர் கோழிக் குஞ்சுகள்
கண்ணை ஈர்த்தன.

பாக்கெட்டிலிருந்த ஒரு ரூபாய்க்குப்
பச்சை நிறக் கோழிக் குஞ்சு கிடைத்தது
வீட்டிற்குக் கொணர்ந்து
தலையில் வைத்து ஆடி மகிழ்ந்து
உண்ணக் குருணை தந்து
உறங்கிப் போனேன்

விடியும் போது
விரைந்து கிடந்தது
அந்த வண்ணக் கோழிக்குஞ்சு
உணர்ந்த முதல் நாளும் அதுவே.

காய்கறிச் சந்தைக்குப் போகும்வழியில்
கம்பிக் கூண்டுகளில் வைத்துக்
கோழிக் கடைகளில் இறக்கப்படும்
பிராய்லர் கோழிகளைப்
பார்க்கும் போதெல்லாம்
பரிதாபமாகச் செத்த அந்தப்
பச்சை நிறக் கோழிக் குஞ்சின்
விரைத்த உடலே
நினைவுக்கு வந்து நெஞ்சை அழுத்துகிறது
                     - முனைவர். ச. மகாதேவன்

                                        பூனை

            கோயில் பூனை
            கோலுக்கு அஞ்சாது
            பாலில்லாமலும் சாகாது

                         - முனைவர். ச. மகாதேவன்

                                        வலிமை


 
விழியுமில்லை
ஒளியுமில்லை
இருட்டிலும்
இயங்குகிறதே
வலிமையுள்ள
வௌவால்
கவலை தந்த பத்திரிக்கை
என் மேசை முழுக்கத் திருமணப் பத்திரிக்கைகள்
ஜிகினாக்களின் மினுமினிப்பில்
பிள்ளையார் வெங்கடாசலபதி முருகன் படங்கள் போட்டு
வண்ணமயமாய்…
அரசியல் தூண்டிலில் நெருக்கப் புழுவாவதற்காகத்
தலைவர்களின் முழுநீளம் படங்களோடு
ஆடம்பரமாய் ஐந்தாறு பத்திரிக்கைகள்…
இடையில்
மரபு மாறாத சாமி படங்களை வரிசையாய் அடுக்கிய
மஞசள் நிறமரபுப் பத்திரிக்கைகள்
தலை வாழை இலை வடிவில்
குறுந்தட்டு வட்ட வடிவில்
எத்தனையோ பார்த்தாயிற்று…
எத்தனையோ வரிகள் அவற்றிலிருந்தாலும்
மண்டபப் பெயரும், மணநாளும் நேரமும்
மட்டுமே
மனம் மனனம் செய்யும்
வரிசையாய் பத்திரிக்கைகளை
நகர்த்தி வந்தேன்..
திருக்குறள் சுவடிபோல் அச்சடிக்கப்பட்ட
அப்பத்திரிக்கை மட்டும் அதிர்ச்சிதந்தது.
சப்த ரிஷிகளையும் சகல தெய்வங்களையும்
ஆசிர்வதிக்கச் செய்து
அவசியம் வரவேண்டுமென அப்பாவோடு
ஆயிரம் முறை அன்போடு அழைத்துச்சென்ற
செட்டிக்குடித் தெரு பத்மா அக்காவின்
திருமணத்திற்கு
அதில் பெயர் போட்ட ஒருவரும்
ஆசிதராததால் நின்று போனதோ?
அதன்பின்பு கல்யாணப் பத்திரிக்கைகளை
நான் சேர்த்து வைப்பதே இல்லை.

                        - முனைவர். ச. மகாதேவன்

                                      பல ஓட்டம்


        விழுப்புரம் சந்திப்பில்
        நெல்லை விரைவு வண்டி
        நின்று நகர்கின்ற
        ஒரு சில நிமிடங்களில்
        சன்னல் கம்பியில்
          “எஸ் வடிவக் கொக்கியை மாட்டிக்
        காபி கேனோடு
        தொடர் வண்டியோடு தொடர்ந்து
        ஓடி வருகிற
        செஞ்சட்டை அணிந்த
        உணவகப் பணியாளன் மாதிரிப்
        பல   நேரங்களில்
        ஓடத்தான் வேண்டியிருக்கிறது
        பலமுள்ளவர்களின் பின்னால் 

                                                   - முனைவர். ச. மகாதேவன்

வைக்கோற் கன்றுகள்


எட்டாம் வகுப்பு முழுப் பரிட்சை லீவுக்கு வந்த
அத்தை பிள்ளைகளுடன்
அதிகாலையிலேயே
பாளை அஞ்சல் நிலையம் அருகிலுள்ள
பால் பண்ணைக்குச் சென்றநாட்கள்                        
சட்டென்று   நேற்றைக்கு காரணமின்றி 
நினைவுக்கு    வந்தன…
ஆளுக்கொரு தூக்குச் சட்டியுடன்
பாலும் மோரும் வாங்கக் காத்துக் கிடப்போம்..
அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்க
பித்தளைப் போணியோடும் மடியில் கட்டிய
எண்ணெய் டப்பியோடும் சைக்கிளிலிருந்து
ஜம்மென்று இறங்குவார்
பால் பீச்சும் மயிலக் கோனார்…
அவர் சொன்னபடியெல்லாம்
பசுக்கள் கேட்பது எங்களுக்கு
ஆச்சர்யமாக இருக்கும்.
கன்றுக்குட்டியை அவிழ்த்து விட்டுக்
கொஞ்சம் எக்கிக் குடிக்கும் போதே
பிடித்திழுத்துக் கட்டிச்
செம்புத் தண்ணீரால்
பசுவின் மடியைக் கழுவும் அவரது செயலை
பார்த்துப் பார்துச் சிலிர்ப்போம்
எல்லாப் பசுக்களிலும்
கடைசியாய் அப்பசுவிற்கு
அருகில் வந்தவர்
பாசத்தோடு தடவிக்கொடுத்தார்
எங்களுக்கும் அவ்வாறு செய்ய வேண்டும் போலிருந்தது.
அவிழ்த்து விடக் கன்று அங்கே இல்லை
கேட்கப் பயம்
ஸ்டூல் மேலேறிப் பரணிலிருந்த
வைக்கோல் அடைத்த
விரைத்துப் போன கன்றுக்குட்டியை
எடுத்துப் பசுவிற்கு அருகில் நிறுத்தினார்
பாவம்…
அவ்வைக்கோற் கன்றினை
அந்த ஐந்தறிவு ஜீவன்
தன்கன்றென நினைத்து நாவால் வருடிக் கொடுத்தது.
வழக்கம் போல் பால் கறக்க
அவர் செம்பைத் தூக்கினார்
அதற்கு மேல் எங்களால்
அங்கே இருக்க முடியவில்லை .
வகுப்பு முடித்து துறையில்
அமர்ந்த போது
சொக்கட்டான் தோப்பு சண்முகத்தின்
தங்கையின் பத்துநாள் குழந்தை
மருத்துவமனையில் இறந்தது
நினைவுக்கு வந்தது
பசுவிற்குக் வைக்கோற்கன்று தந்த
கணநேரத் கானல் நிம்மதியைச்
சிசுவை இழந்த சண்முகத்தின்
தங்கைக்கு யாரால் தரமுடிமுடியும்?
சில நேரங்களில்
அஃறிணையாகவே
இருந்தது விட்டுப் போகலாம்
போலிருக்கிறது.  
                 - முனைவர். ச. மகாதேவன்