தாழ்பாளற்ற நாட்கள்

விடியும் போதே வெறுப்பாயிருந்தது
மின்சாரமற்ற மின்விசிறி மேலே...
வியர்வையால்
பொது பொதுத்தத் தலையணை கீழே..

என்றைக்கும் இருக்கிற நாளாய்
இன்றைக்கும் இருக்கத்தான் வேண்டுமா?

புத்திசாலித் தனங்களைப்
புறந்தள்ளிய புதிய நாளை...
தொழுத கைக்குள்ளும் மறைந்திருக்கிற
குறுவாள்களைத் துப்பறிந்து தரும்
கண்களற்ற இனிய நாளை
வாகனங்களை முந்தி
தலை தெறிக்க அலுவலகம் ஓடாத ஓய்வு நாளை
டையது கட்டிப் பொய்யது பேசி
மெய்யதைத் தொலைக்காத தூய நாளை நோக்கிச்
சிறகுகள் பூட்டிய வண்ணத்துப் பூச்சி மாதிரிச்
சிந்திக்காமல் பறந்தேன்...
அறிவு இருப்பதையே மறந்தேன்...
இன்று ஒரு வேளை
என்னை எந்திரமாக்காத
ஞாயிற்றுக்கிழமையாக இருக்கலாம்..
இன்று, தாழ்பாள்கள் ஏதுமற்றுத்
திறந்து கிடக்கிறது
என் நந்தவன நாள்.
  - முனைவர். ச. மகாதேவன்