பெட்டிகளின் உலகு…
முந்திப் பிறந்த குழந்தையைக் காக்க
இளவெப்பச்சூட்டோடுக்
கண்ணாடிப் பெட்டிகள்
வெளிநாட்டுக்குச் சம்பாதிக்கப் போன
மகனின் வரவுக்காய் இறந்த பின்னும்
காத்திருக்கிறார்கள் பெற்றோர்கள்
குளிர்பதனப் பெட்டிக்குள்
அட்டையிட்டால் அள்ளித்தரும்
உடனடி பணம்தரு பெட்டிகள்
எதுவும் பாயாமலிருக்கச்
சுதந்திர தின உரை விடுக்கும்
தலைவரைத் தற்காக்கும்
குண்டு துளையாப் பெட்டிகள்
சுடுகாட்டில் எரியூட்ட
மின்சாரப் பெட்டிகள்
பதவி பெற, பட்டம் பெற
பணம் நிறை பெட்டிகள்
அம்மா குந்தி!
பெட்டியில் வைத்துக் கர்ணனை
நதியில் விட்டாலும் விட்டாய்
இப்போது
எல்லோரைச் சுற்றியும்
ஏதாவது ஒரு பெட்டி
எப்போதும்
இருந்துகொண்டே
இருக்கிறது
ஆம்!
பெட்டிக்குள் வாழும்
குட்டிகளானோம் நாம்….
- முனைவர். ச. மகாதேவன்
0 comments:
Post a Comment