அப்பாவின் மைக்கூடு

பிரில் மையைப் பேனாவுக்குத்
திகட்டத் திகட்டப் புகட்டும்
அப்பா!
மூன்றே மாதத்தில்
முழுப் பாட்டிலையும்
காலி செய்து விடுவார்

கசியும் மையின் நீலநீரோட்டத்தை நிறுத்த
இருக்க இருக்கிறது
சிகப்பு நிற பழைய ரெமி பவுடர் டப்பாவில்
நிரப்பி வைத்த கிரிஸ்

சோம்பல் பார்க்காமல் அதன்
கழுத்துப் பகுதியைப் பனியன் துணியால்
பளிச்சென்று ஆக்கிவிடுவார் அப்பா

காலி மைக்கூட்டினை
அவர் வீணே தூர எறிந்ததில்லை
மை பாட்டில் மூடியை அகல ஆணியால்
துளையிட்டு ஸ்டவ் திரிபோட்டு
மண்ணெண்ணெய் விளக்காய்
மாற்றிடுவார்.

மின்சாரமற்ற இரவுப் பொழுதுகளில்
மைக்கூடு வெளிச்சத்தில்
அவர் முகம்
எப்போதையும் விடப் பிரகாசமாயிருக்கும்
எண்ணெய் தீரும்வரை
அவர் கைகள்
அலுப்பில்லாமல்
பட்டை பட்டையாய்
பக்கம் பக்கமாய்
எழுதும்

இப்போது இன்வட்டர்கள் இருக்கிறது
மின்சாரம் போன அடுத்த விநாடி
எரியும் அவசர விளக்குகள்
இருக்கின்றன..

ஆனால்
பக்கம் பக்கமாய் எழுத
அப்பாவால் முடியவில்லை
எதுவும் பேசாமல் அப்பா
பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறார்.

குப்பை கூடாதென்று
அம்மா அந்த
மைக்கூடு விளக்கையும்
தெருவில் வீசி விட்டாள்.

அதோடு அப்பாவின்
ஒளியும் எழுத்தும்
அப்பால்
போனதாகவே எண்ணம்

பல ஓட்டம்

விழுப்புரம் சந்திப்பில்
நெல்லை விரைவு வண்டி
நின்று நகர்கின்ற
ஒரு சில நிமிடங்களில்
சன்னல் கம்பியில்
“எஸ்” வடிவக் கொக்கியை மாட்டிக்
காபி கேனோடு
தொடர் வண்டியோடு தொடர்ந்து
ஓடி வருகிற
செஞ்சட்டை அணிந்த
உணவகப் பணியாளன் மாதிரிப்
பல நேரங்களில்
ஓடத்தான் வேண்டியிருக்கிறது
பலமுள்ளவர்களின் பின்னால் 




                       - முனைவர். ச. மகாதேவன்