அஞ்சல் அடையாளம்...

கடிதங்களற்ற வாழ்க்கை
கழுத்தை இழந்த முண்டங்களாவே
எனக்குத் தெரிகிறது.

அஞ்சலட்டைகளில் இலக்கியம் படைத்துவரும்
தி.க.சி. யைப் போல
அச்சடித்தது போல்
ஆயிரமாயிரம் கடிதங்கள் எழுதிய
வல்லி்க் கண்ணனைப் போலப்
புதுச்சேரியிலிருந்து கிண்டலாய் எழுதும்
கி.ரா. போல் கடித இலக்கியங்கள் படைக்க
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை...
உண்மை! இது வெறும் புகழ்ச்சியில்லை

கருமை மை பூசப்பட்ட
கருமாதிக் கடிதங்களின்
மரண அடர்த்தியை
எந்த மின்னஞ்சல் செய்து
தந்து விடும்?

“வாகா எல்லையிலிருந்து
மிலிட்டரிக்கார மருதையா
தன் மனைவிக்கு ஆசையாய் ரகசியமாய்
எழுதிய இன்லண்ட் கடிதங்கள்
இன்னொரு இன்பத்துப் பாலாயிற்றே!

அடிப்பூர அழைப்பிதழோடு
அம்பாளின் குங்குமப் பிரசாதத்துடன்
திருவில்லிபுத்தூரிலிருந்து வந்த
ஐந்து ரூபாய் கவர் தந்த நிம்மதி கொஞ்சமா?

ஒரு மணியாகி விட்டால்
தபால்கார செல்வராஜ் அண்ணாச்சியைக்
கண்கள் தேடுகின்றன
கடிதம் ஏதும் எனக்கு வராததால்
தலைகவிழ்ந்தபடி
சைக்கிளை உருட்டிக் கொண்டு
அடுத்த வீட்டுக்கு
அவசரமாய் அவர் நகர்கிறார்.
                - முனைவர். ச. மகாதேவன்