குயிலின் குரலில்….

        அந்தக் குயில்
        கூவும் போதெல்லாம்
        என் ஆன்மா
        ஆனந்தமயமாகிறது . . .
      

  


அதன்
ஒவ்வோர் அழைப்பிலும்
இயலாமையின் இன்னிசைகள்
மரத்தின் மீதமர்ந்து நம்
மனதைப் பிசைய
அந்தப் பாரதிக்குப் பிடித்த
பறவையால் மட்டும் எப்படி முடிகிறது?
எதனை நோக்கிய
எதனது அழைப்பு
அதன் ரம்யமான குரல்?
எதையோ எதிர்பார்த்து
எதையோ இழந்து
எதையோ அழைக்கும்
அந்தக் கருப்புக் குயிலின்
இன்னிசைக்கீதம்
சோகத்தின் சுகக்குரலா?
அருமை ஆத்மாக்களே!
இனி
குயில்கள் கூவும் போதேனும்
குவலயத்தை
அமைதி காக்கச் சொல்லுங்கள்

              - முனைவர். ச. மகாதேவன்