திணரும் வேலி

வழிக்போக்கர்கள் வந்தமரும்
திருநெல்வேலி வளவுவீட்டுத் திண்ணைகள்
இடிக்கப்படுகின்றன
வாகனம் நிறுத்த வசதியில்லையாம்.

திருச்செந்தூர் நடைப்பயணம்
மேற்கொள்பவர்களுக்கு அள்ளியள்ளி
அன்னமிட்ட விஜயராகவ முதலியார் சத்திரத்தில்
சிமெண்ட் மூட்டைகள்
விற்பனையாகின்றன.


வண்ணார்பேட்டை
ஞானமணியம்மாள் சத்திரம்
வாகனப் பழுது நீக்கமாக மாறி ஒரு யுகம்
கழிந்துவிட்டது.

மங்கம்மா சாலைகளில்
மாடிவீடுகள் கிளம்பி விட்டன

புதுமைப்பித்தனின்
காலனும் மருதாயிக் கிழவியும்
உலவிய
பேயடிப்பதாய் மக்கள் பயப்படும்
வெள்ளைக்கோயில்


சுடுகாட்டுக்கருகே சென்ட் இரண்டு
லட்சத்திற்கும் இடமில்லை.

சாலையோரத்து மருத மரங்களை
மின்சார ரம்பத்தால்
மொட்டையடித்தாயிற்று..

தாமிரபரணியை உறிஞ்சித்
தனியார் பாட்டியலில்
விற்றாகி விட்டது;

சுலோசன முதலியார் பாலத்தைத்
தொலைபேசி வட இணைப்பிற்காக
நூறுமுறை உடைத்தாகிவிட்டது;
மிச்சமிருப்பது
அல்வா மட்டும்தான்!
அதையும் கொடுத்துவிடலாமே!

               - முனைவர். ச. மகாதேவன்