காகங்களும் பாவங்களும்…
இப்போதெல்லாம்
மொட்டை மாடியில்
காகங்களைக் கண்டால்
பாவமாக இருக்கிறது.
அப்போதெல்லாம்
அம்மா அடுக்களையில்
சமையல் முடித்ததை
அவளது காக அழைப்பு
ஊருக்கு
உணர்த்தும்.
போன புதன்கிழமை
நயினா தாத்தாவின் தெவசம் முடித்து
வாத்தியார் தந்த பிண்ட உருண்டையைத்
தொன்னையில் வைத்து
மொட்டை மாடியில்
காகத்தைச் சப்தமாய் கூப்பிட்டேன்.
சாதத்தைச் சாப்பிடப்
பத்துப் பதினைந்து காகங்கள்
பாய்ந்து
உடனே உண்ண வந்தது
நல்ல சகுனமென்று சொன்ன வாத்தியார்
ஒரு வருடமாய்
தாத்தாவுக்குத் தாங்காத பசியென்றார்
கடும்பசி
தாத்தாவுக்கு மட்டும்தானா?
கடும் பசி காகத்திற்கும் தானே!
அது சரி
அரைக் கரண்டிச் சோற்றில்தான்
மிச்சப்படுத்தப் போகிறோமா
நம் வீட்டுக் கடன்களை?
- முனைவர். ச. மகாதேவன்
0 comments:
Post a Comment