பொறுக்கி எடுக்காதீர்கள்
கவிதைத் திறனாய்வுக்காகப்
பொறுக்கி எடுக்கப்படுகின்றன
புரிந்த சில வரிகள்!
பிரேதங்களின் மீதும்
குரோதங்கள் காட்டும்
உங்களால் எப்படிப் புரிந்துகொள்ள முடியும்?
கவிதையின் உள்பொருளை
ஆங்காங்கே
அடிக்கோடிடாதீர்கள்.
அடுத்த வரிகள் வருத்தப்படும்.
அருமை எனச் சொல்லாதீர்கள்
உங்களுக்கு அர்த்தமான வரிகளை மட்டும்
என் முன்பின் வரிகளை
முக்கியமற்றதாக்க உங்கள்
மூளைத் திறனால் தயவு செய்து
முயலாதீர்கள்
உங்களால் அழுத்தமிட்டுக் காட்டப்படும்
வசதியானவரிகளால்
மற்ற வரிகளுக்கு வருத்தம்!
வார்த்தைகளுக்குள் ஏன்
வருத்தங்களை உண்டாக்குகிறீர்கள்?
கவிதைகள்
மொழித் தண்டவாளங்களில்
வழுக்கியோடும் வரிச் சக்கரங்கள்
உங்கள் தொடர்ச்சியற்ற
இரும்புத் துண்டுகள்
கவிதைத் தொடர் வண்டியைக்
கட்டாயம் கவிழ்க்கும்
சரி! ஒன்று கேட்கிறேன்
கடைசி வரிகளில் . . .
சிரித்து எச்சில் வடிக்கும் – உங்கள்
குழந்தையின் கன்னத்தை மட்டும்
தனியே அறுத்தெடுத்து
அழகெனச் சொல்லும்
துணிவுண்டா உங்களுக்கு?
- முனைவர். ச. மகாதேவன்
0 comments:
Post a Comment