கம்பிக்கோப்பு...

முப்பது வருடங்களுக்கு முற்பட்ட
கம்பிக் கடிதக் கோப்பு
வெள்ளையடிக்கும் போது
தட்டோடி அறையில்
தற்செயலாய் கிடைத்தது

பஞ்சுமிட்டாய் நிற வண்ணம் பூசிய
மரக்கட்டை வட்டவில்லை
அதன்மையப் புள்ளியில்
தாத்தாவின் வளைந்த கைப்பிடியைப் போல
கம்பிக் குத்தல்

வரலாற்றை வாங்கியபடி
பழுப்பேறிய கடித உறைகள்
பதினைந்து பைசாக் கார்டுகள்

காலத்தைத் துளையிட்டுக்
கம்பியில் மாட்டிவைத்ததாய்
அடுக்கடுக்காய்
எங்கள் குடும்ப வரலாறுகள்
நாட்பதிவுகள் கடிதங்களாகக்
காலம் கடந்த பின்னும்இன்னும்
காலமாகாமல் கம்பீரமாய்

சின்னவயதில் நயினாத்தாத்தா கோபாலசாமி கோயில்
கோபுரத்திலேறிக் கோபித்துக் கொண்டு
குதித்ததில் அவரது சுண்டு விரல்
முறிந்ததைச்
சாரிப்பாட்டியின்
அறுபத்து மூன்றாம் வருடக்கடிதம் விளக்கியது

தட்டப்பாறையில்
கோயில் பூசை செய்யப்போன
பெரியதாத்தா
அபிஷேகம் செய்யும் அவசரத்தில்
தண்ணீர்க்குடத்தைப் போட்டு
பிள்ளையார் மண்டையை
உடைத்து விட்டு
சொல்லாமல் கொள்ளாமல்
ஓடிவந்ததாய்
அடுத்த கடிதம்

இதோ படித்துக் கொண்டிருக்கிறேன்
அந்த அறுபதாண்டு
அபூர்வ கடித வரலாறுகளை
இந்தக் கவிதையை
நீங்கள் படித்துக் கொண்டிருக்கும்
இப்போதும் கூட..

அறுபத்து மூன்றாம் வருடத்து
அந்த எழுத்துக்கள் மெல்லஎழுந்து
உயிரோடு உருண்டு
இதோ இந்த வரிகளுக்கான
வலிமையைத் தருகின்றன.

அது சரி
உங்களின் எந்தக் கணினி சேர்த்து வைத்திருக்கிறது?
அறுபது ஆண்டிற்கு
முற்போன என்
ஆதி முன்னோரின்
அழகான வாழ்க்கையை?