பறிபோன பால் ஐஸ்கள்
தெருவெல்லாம் குழந்தை ஒலிகள்
“ரிங்கா ரிங்கா ரோசாக்களாய்“
ஒரு குடம் தண்ணி எடுத்து
கயிறு கட்டி உள்ளுக்குள் ரயில் விடாத
குழந்தைகள் என்ன குழந்தைகள்?
ஜில் ஜில் விலாஸ் ஐஸ் பாக்டரியின்
சதுரப் பெட்டியின் மரக்கட்டை மூடியைச்
சப்தமாய் அடித்தபடி சைக்கிள் மணியோசையோடு
இதோ தெருவுக்குள் வந்து விட்டார் ஐஸ் மணி கிச்சா தாத்தா.
ஒரு ரூபாயோடு உள்ளிருந்து
ஓடுகிறான் என் மகன் பிரணவ்..
பாக்கெட் ஐஸோடு பழத்தை உள்ளேபோட்டுக்
கட்டையால் நைத்துத் தருகிறார்.
துளையிட்டுச் சூப்பி மகிழ்கிறான்
தம்பிக்காக அவன் தம்ளரில்
வாங்கி வைத்த பால் ஐஸ் உருகி
உள்ளுக்குள் குச்சி மட்டுமே.
ஐந்து நட்சத்திர மதிப்போடு
ஐஸ்கிரிமின் பத்து ரூபாய் பந்துகள் வந்தபின்
கிச்சா தாத்தாவோடு பாக்கெட் ஐஸ்களும்
பால் ஐஸ் குச்சிகளும் காணாமல் போனது
தம்பிக்காகத் தம்ளரில் ஏந்தவோ
உள்ளங்கையில் அடக்கி உச்சிவெயிலில்
ஓடவோ இயலாத
தெருக்களானது எங்கள் நெருக்கடி மிகுந்த தெருக்கள்.
- முனைவர். ச. மகாதேவன்
1 comments:
இணையதளம் தமிழ்துணையொன்றை பெற்றுக்கொடுத்திருக்கிறது.
சுய விபரம் அறிந்தேன்.மிக்க மகிழ்வு..நட்பு தொடரட்டும்.
வாழ்க தமிழோடு !
பாண்டியன்ஜி.
சென்னையிலிருந்து...
Post a Comment