விபூதிப் பாட்டி
விபூதியைப் போட்டு
விரலால்
பளிச் சென்றாக்குவாள்
காமாட்சிப்பாட்டி
மறுநாள் காலை
அழகுநாச்சியம்மன்
பெயரைச் சொல்லி அதையே நெற்றியில் பூசிக்கொள்வாள்.
எதுவோ கடித்து
விட்டதெனத் தடிப்பைக் காட்டினால்
அவ்விடத்தில் விபூதியை
அள்ளிப் போட்டுக்
கரகரவெனத் தேய்ப்பாள்
வரலெட்சுமி
விரதத்திற்கு முந்தைய நாள்
கறுப்படித்த வெள்ளி
அம்மன் முகத்தை
விபூதியால் வெள்ளை
வெளேறென்றாக்கிடுவாள்.
பாட்டி!
அசதியாயிருக்கிறதெனச் சொன்னால்
அன்பாய் தலைமுடி கோதி
விபூதி எடுத்து
மந்திரித்து
ஐந்தாறு முறை கொட்டாவி
விட்டுத்
தலையைச் சுற்றிக் கண்ணேறு கழிந்ததெனத்
தலைவாசலில் நின்று
ஊதிவிடுவாள்.
நள்ளிரவு
நேரம்
தொட்டிலில் தூங்கும்
விஷால் அலறியழுதால்
வாரிச் சுருட்டி
எழுந்து
சுடலையோட்டமெனச்
சொல்லி
அவன் நெற்றியில்
விபூதியிட்டுத்
தோளில் தட்டி
உறங்க வைப்பாள்
தசரா வந்தால்
கண்ணாடிப்
படங்களைக் கழற்றி
விபூதியால்
பளிச்சென்றாக்குவாள்.
ஒற்றைப்
பொருளால் ஊர்ப்பட்ட வேலை
செய்யத் தெரிந்த
என் பாட்டி தந்த
விபூதி மட்டுமே
இப்போது கொட்டானில் உள்ளது
பாவம்... கடந்த
மாதம் வெள்ளக்கோயில்
சுடுகாட்டில்
அவள் விபூதியாகித் தாமிரபரணியில்
கலந்து போனாள்.
- முனைவர். ச. மகாதேவன்
0 comments:
Post a Comment