அதிகாலைக் கனவு
கண்டதைச் சொல்லும்
காட்சி ஊடகங்கள்
மயக்க மனதின் மாயக்கண்ணாடிகள்
ஆதி மனிதனின் அடிமனப்பயச் சுவடுகளாய்
உடலில் ஊர்ந்து நம் எலும்புகளை
முறிப்பதாய் ஆதிக்கனவுகள் பாம்புவடிவில்
சாவுக் கனவுகளில் சங்கொலிகள், சிகண்டிகள்
யாவுமுண்டு
திருப்பதி ஏழுமலையான் வந்தார் ஓர் நாள்
வைர அலங்காரத்தில்
போன வருடம் இறந்து போன
பாட்டி வந்தாள்...
பசி தாங்க முடியவில்லை எனக் கதறி அழுதாள்
செஞ்சீலையணிந்து
’ஜல்...ஜல்’ சப்தத்தோடு எங்கள் தெரு
உச்சினிமாகாளி ஒரு நாள் வந்தாள்.
அந்த அதிகாலைக் கனவு
என்னுள் அதிசயம் ஊற்றிற்று
முப்பத்தொன்பது வயதான பின்னும்
அழகாயில்லை என அனைவராலும்
புறந்தள்ளப்பட்ட தெப்பக்குளத்தெரு
செண்பகத்தக்காவின் கல்யாணம்
சாலைக்குமாரசுவாமி கோவிலில்
நடப்பதாய் நான் கண்டகனவு மட்டும்
இன்னும் மறக்கவேயில்லை.
அதிகாலைக் கனவென்பதால் அந்த
அதிசயம் நடக்குமென
அடுத்த கனவைக் காணாமல்
காத்திருக்கிறேன்.
- முனைவர். ச. மகாதேவன்
0 comments:
Post a Comment