ஆசிரியர் தினக் கட்டுரைப் போட்டி – மாநில முதலிடம் பெற்ற கட்டுரை


ஆசிரியர் தினச் சிறப்பிதழையொட்டி மீனாட்சி மருத்துவ மலர் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கட்டுரைப் போட்டி நடத்தியது.  மாநில அளவில் மனதில் நின்ற மாணவர் கட்டுரை எழுதி முதல் பரிசு பெற்ற நெல்லையைச் சேர்ந்த ஆசிரியர் ச. மகாதேவனின் கட்டுரை இதோ…
    ஓர் ஆசிரியரின் வாய் திறக்கும்போது, ஆயிரம் சிறைச்சாலைகள் கதவுகள் அடைக்கப்படுகின்றன.
    பாடம் நடத்தப்படுவதைவிடப் பாடமாய் நடந்தோமென்றால் மாணவன் மாண்புடையவனாவான்.  ஆசிரியரின் வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் தொடர்பு இருப்பதை மாணவன் உணர்ந்தால் அவனால் சனாதிபதியாகுமளவுக்குச் சாதிக்க முடிகிறது.  ஓர் அம்பேத்கார் அறிஞராக உருவெடுத்தாரென்றால், அவரின் ஆசிரியர் பேரறிஞர்!
    ஏதென்ஸ் நகரத்தின் இனிய இளைஞர்களுக்கு, உன்னையே நீ அறிவாய்! என மாஞானி சாக்ரடீஸ் எடுத்த பாடம்தான்.  அதற்குப்பின் பிளேட்டோ, அதற்குப்பின் மகா அலெக்சாண்டர் எனச் சாதனைப் பட்டியலை நீள வைத்தது.  மகா வித்வான் மீனாட்சி சுந்தரனாரின் தமிழ்உளி தான், தமிழ்த்தாத்தா என்னும் ஒப்பற்ற சிற்பத்தை உருவாக்கிக் காட்டியது.

    ஆயிரம் கண்கள் ஆப்பிள் விழுவதைக் கண்டன ஆனால் நியூட்டனுக்குத்தான் புவிஈர்ப்புத் தத்துவம் புதிதாகப் புலப்பட்டது.
    திரியுள்ள விவேகானந்தர் எனும் தீபம் தான், பொறியுள்ள மகான் இராமகிருஷ்ணர் எனும் ஒளிச் சுடரால் ஒளி வீசிச் சென்றது.  
“மாண்புடையவன் அவனே மாணவன்”
    பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் பயின்று, என் உயிரினும் மேலான தமிழ் ஆசான்களால் செதுக்கப்பட்டு, பாரதப் பிரதமரின் தேசிய விருதை இளமறிவியல் இரண்டாமாண்டுபடிக்கும் போதேபெற்று, 1998ல் எம்.பில் படித்து முடிப்பதற்கு முன்னே அல்ஹாஜ் த.இ.செ. பத்ஹுர் ரப்பானி சாகிப் எனும் தமிழருவியின் உதவியால் 23 வயதில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் தமிழ்த் துறையில் கடந்த நான்காண்டுகளாகப் பணியாற்றி வரும் எனக்கு, என்னிடம் படித்துச் சென்ற 2000 மாணவ, மாணவிகளுமே வைரங்கள்தான் என்றாலும்,
    தூசு தட்டி நான் பட்டை தீட்டிய ஓரிரு வைரங்களை உங்கள் முன் வைக்கிறேன். ”நாங்கள் விவேகானந்தர்களாக விளங்கத் தயார்தான்... இராமகிருஷ்ணர்களைத் தான் இராப் பகலாகத் தேடுகிறோம்’ என்று ஒரு மாணவன் கவிதை வாசித்துக் கொண்டிருந்த அந்த ஒரு வினாடியில் இரண்டாமாண்டு கணிதவியல் விலங்கியல் வகுப்புக்குள் நுழைந்தேன்.  செய்யுள் நடத்த வேண்டும் எனச் சொல்லி வரிகளை எழுதிப் போடக் கரும்பலகையில் கை வைத்தால் அதிர்ச்சி! கண்டவுடன் திகைத்துப் போனேன். பேச வாய்வரவில்லை. பெற்ற வயிற்றிலே இவன் பெட்ரோல் குண்டு எறிந்து விட்டானே என்ற வருத்தம் ஒருபுறம், இவர்களுக்கு வெறும் பாடம் மட்டுமா நடத்தினேன்? நான் கற்றுத் தந்த மதிப்பீடுகளுக்கு ஏன் மாரடைப்பு வந்தது?  சிகரங்களை நோக்கிச் சிந்திக்க வேண்டியவன், ஏன் தகரமாகத் தரமிழந்து போனான்? என் மனம் துடித்தது.  கண்ணீர் வடித்தது.
    ஏறக்குறைய 50 பெண்கள் 40 ஆண்கள் என இரு பாலினரும் பயிலும் வகுப்பில், ஏதோ ஒரு மாணவன் மதிய உணவு நேரத்தில் ஆங்கிலப் பேராசிரியர் திரு.மார்க்ஸ் அவர்களின் உருவத்தைக் கரும்பலகையில் ஓவியமாக வரைந்திருந்தான்.  அழிக்க மறந்து விட்டான்.  
அடுத்து என் வகுப்பு! ஆண்டவனை அடையாளம் காட்டும் ஆசிரியரையா அவமானப்படுத்துவது? வருத்தத்துடன் கேட்டபடி, இக்காரியத்தைச் செய்தது யார்? எனக் கேட்க, வகுப்பறையில் ஒரு நிமிடம் மௌனம் அலறியது.  திடுக்கிட்டேன்.  மிகவும் அமைதியான மாணவன் என நான் நினைத்த மாணவர் எம்.பி. அனந்த குமாரை நோக்கி என் கவனம் திரும்பியது.  
’தவறு செய்வது மனிதஇயல்பு திருத்திக்கொள்’ உனது பலவீனத்தை மாற்று; அதுவே பலம்” என்று அமைதியாகக் கூறி அமரச் செய்தேன்.
    கல்லூரி முடிந்தவுடன் துறைக்குத் தனியே அழைத்துப் பேசினேன்.  அமைதியாக ஆனால் ஆழமாக... தம்பி! தூண்டுகோல்களை நீ தூக்கி எறியலாமா? கரும்பலகையிலும், கழிவறைகளிலும் கிறுக்குவதை ஓவிய அட்டை வாங்கித் தருகிறேன். நிறைய வரை! போட்டிக்குப் போ...! பரிசுகளைக் குவி!  டாவின்ஸியாய் மாறு, கவின்கலை மன்றத்தில் வாய்ப்புத் தருகிறேன்... மூச்சுப்பிடித்து முன்னேறு... ’என்று அறிவுரை கூறினேன்.  என் வார்த்தைகள் அவனது வாழ்வை மாற்றின. எங்குச் சென்றாலும், அதன்பின் அவன் ஓவியமே முதல் பரிசு பெற்றது.  ”கனவுச் சிற்பங்கள்” எனும் கவிதை நூலுக்கு அட்டைப்படம் வரையுமளவு அவன் அடையாளப் படுத்தப்பட்டான்.  தினமும் இப்போது வீட்டுக்கு வருகிறான்.  என் நண்பனாக அவன் மாறிப் போனான். கள்வனாகக் கல்லெறியப் பட்டவன், இதோ வால்மீகியாக வாய்ப்புப் பெற்று விட்டான்.
உதவும் உள்ளங்கள்...

    “பத்தில் ஒரு பங்கைத் தானம் செய்யுங்கள்.
    பணத்தின் மீது பேராசை கொள்ளாதீர்கள்.
    தினமும் ஓர் உயிருக்கு நன்மை செய்யுங்கள்.
    இவைதான் என் குருநாதர் “பாலம்“ பா. கலியாணசுந்தரனாரின் தராக மந்திரம். திருவைகுண்டம் குமரகுருபரர் கல்லூரியில் நூலகராகப் பணியாற்றித் தியாகவாழ்க்கை வாழ்ந்து, திருமணமே முடித்துக்கொள்ளாமல் தன்னுடைய ஊதியம் (ரூ. 15.000) முழுக்க ஒவ்வொரு மாதமும் ஏழைகளுக்காகத் தானம் வழங்கி, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றவர், தான் இறந்தபின் தன் உடலைப் புதைக்கவோ எரிக்கவோ கூடாது என்றும் அதைத் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தானமாய் அறுத்துப் பாடம் படிக்க உதவுவதாக உயிர் எழுதி வைத்துள்ளவர்.  இவரது சேவையைக் கண்டு திரு. ரஜினிகாந்த் குடும்பத்தாரே தன் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்டது போன்ற செய்திகளைக் கூறி, முதலாமாண்டு வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தேன்.  அய்யா கலியாண சுந்தரனாரோடு இரண்டு ஆண்டுகள் தங்கி, தமிழுகத்தின் பிரபல வார இதழுக்காக அவர்களின் வாழக்கை வரலாற்றை எழுதியிருந்தேன்.     
மாணவர்களே! சேவை செய்வதற்குப் பணம் தேவையில்லை.  மனம் தான் முக்கியம்.  கோடி ரூபாய் பணத்தை வைத்துக் கொண்டு ஒரு ரூபாய் கூட உதவி தராமல் இருந்தால், அவன் பிச்சைக்காரன்.  ஒரு ரூபாயை வைத்துள்ள பிச்சைக்காரன், பத்துப் பைசாவை அடுத்தவருக்குத் தானமாகத் தந்தால் அவன் கோடீஸ்வரன்“.

உதவும் உள்ளங்கள் சீனிவாசன்   

உங்களோடு படிக்கும் மாணவன் ஏழையாக வறுமையில் இருந்தால், ஆளுக்குப் பத்து ரூபாய் தந்தால் போதும்.  அம்மாணவருக்குத் தேர்வுக் கட்டணம் செலுத்தலாம்.
    ஊதுபத்தியாக ஊருக்கு உழைத்தால் - நீ
    மரணித்த பின்னும் மணத்தோடு இருப்பாய்“
    அடுத்தவருக்காக வாழும் மனிதனின், மாணவனின் பெயர் இறைவனின் இதயத்தில் இடம் பெற்று விடும்.  கல்லூரிக்கு வருவது முதல், போவது வரை ஒரு நாளில் ஏதேனும் ஒரு நல்ல காரியம் செய்துவிடு.  அன்றைக்கு ஒரு நல்ல காரியமும் செய்ய முடியாவிட்டால், ஒரு செம்பு தண்ணீரை வீட்டுச் செடிக்கு ஊற்றி விட்டுத்தூங்கு.
    உன் வீட்டில் நீத்தார் படமிருக்கும்.  அதில் தோற்றம் என்று எழுதி ஒரு வருடமும், மறைவு என எழுதி ஒரு வருடமும் எழுதப் பட்டிருக்கும்.  இடையில் (தோற்றம் – மறைவு) உள்ள சிறு கோடு தான் வாழ்க்கை.  அந்த சிறிய கோட்டு இடைவெளி எத்தனை நாள்? என்பதுதான் கேள்வி.
    “பாடத்தோடு மனித நேயத்தையும் மனப்பாடம் செய்.
    உதவும் உள்ளத்தோடு உலகின் வாழ்“
    என்று கூறிவிட்டு வெளியே வந்துவிட்டேன்.  பல மாணவ மாணவியர் கண்களில் நீர்த்துளி.  ஒரு மாணவன் மட்டும் உன்னிப்பாய் கவனித்தான்.  மாலை 5 மணி... மாணவ மாணவியரோடு பேசிவிட்டு வீடு கிளம்ப எத்தனித்தேன்.  எதிரே அந்த மாணவன்.  அய்யா....உங்களின் சொற்கள் என் நெஞ்சைச் சுட்டன.  ஆத்மாவைத் தொட்டன.  சேவை இயக்கத்தைச் சீக்கிரம் தொடங்குவேன்’ என்று கூறிச் சென்றவன் அடுத்த நாள் நேதாஜி இளைஞர் சேவை இயக்கம்’ தொடங்கினான்.  மாதம் தோறும் கூட்டம் போட்டான்.
    என்னுடைய பத்தில் ஒரு பங்கு பணத்தைப் பெற்று “எஸ்தர் அனாதை நிலையம்“ மாணவ மாணவியருக்கு நோட்டுப் புத்தகம் வாங்கிக் கொடுத்தான்.  அடிபட்டோர் முன் ஆம்புலென்ஸ்சாய் மாறினான்.  திக்கற்றவர்களக்குத் தெரஸாவாய் உதவினான்.  வல்ல நாட்டைச் சார்ந்த 7 வயது மாணவி செல்வி இரத்தப் புற்றுநோயில் உயிருக்குப் போராடியபோது கையில் உண்டியலேந்தி வகுப்பு வகுப்பாக நடந்தான்.  குஜராத் பூகம்ப நேரத்தில், இந்தியச் சகோதரனுக்காக வீடு வீடாகக் கையேந்தி அரிசி வாங்கி மூட்டை கட்டி அனுப்பி வைத்தான்.  கிராமந்தோறும் கலை நிகழ்ச்சிகள் வழங்கி எய்ட்சுக்கு எதிராக நாடகம் நடித்துப் பிரச்சாரம் செய்தான்.  எங்கள் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி மாணவர்களுக்குக் கலைப் பயிற்சி அளித்தான்.
    மொத்தத்தில் 3 ஆண்டுகளில் அன்னை தெரஸா அம்மையாரின் திருநெல்வேலிப் பதிப்பாகவே மாறிப் போனான்.  நரேந்திர நேதாஜி இளைஞர் இயக்கம் என்ற பெயர் கூடச் சமயச் சார்போடு அமைந்துவிடுமே என்று எண்ணி, உதவும் உள்ளங்கள் என்று பெயரை மாற்றி இதோ மூன்றாவதாண்டை நோக்கிச் சேவையைத் தொடங்கிவிட்டான்.  மாவட்ட அறிவியல் மைய இளம் விஞ்ஞானியாக ஆண்டுக்கு ஆண்டு அறிவியல் கண்காட்சி நடத்துகிறான்.  அக்குபஞ்சர் தேர்வெழுதி மருத்துவராகப் பதிவு பெற்று, கால் ஊனமுற்றவர்களைத் தன் மருத்துவ முறையால் குணமாக்குகிறான்.  ஆம்! என்னிடம் வந்து தீந்தமிழ் படித்த மு.ச. சீனிவாசன் தான் என் மனதில் நிற்கும் நல் மாணாக்கன்.
    தேமாவும், புளிமாவும் கற்றுக் தருவது மட்டும் ஆசிரியர் பணியன்று.  ஆன்மாவை ஆசுவாசப்படுத்துவதும், மகாத்மாக்களை மறுபதிப்புச் செய்வதும், தெரஸாக்களைத் தெரியவைப்பதையும் ஆசிரியர்கள் இன்று செய்தாக வேண்டும்.
    சமுதாயத்தின் சீக்குப் பிடித்த சிந்தனைகளின் போக்குப் பிடிக்காமல், சமுதாய அழுக்குகளைச் சலவை செய்யும் அக்கினிச் குஞ்சுகளை அவனிக்கு அடையாளம் காட்டுவதும் ஆசிரியரின் உயரிய பணிதான்.
    விவேகானந்தர் கேட்ட 100 இளைஞர்களையும் என் ஆயுளுக்குள் அடைகாத்துத் தந்து விட நினைக்கிறேன்.  இதோ ஓர் இளைஞர் தயார்.  அவன் தான் “ உதவும் உள்ளங்கள்” மு.ச. சீனிவாசன் எனும் என் அன்பு மாணவன்.